திருச்சிற்றம்பலம்
""திருப்பதிகம் வின்ணப்பம் செய்வார்"
""பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்"
என்று சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருவாக்கில் மலர்ந்த, ..இறைவனுக்கு இசைத்தொண்டு புரியும் , திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் ஓதுவாமூர்த்திகள் பற்றிய பதிவு இது.
ஞானசம்பந்தப்பிள்ளையார் அவதரித்த தலமாகிய தருமையாதீனத்தின் திருக்கோயிலாகிய சீர்காழிப்பதியிலே அருள்நிறை தோணியப்பர் ஆலயத்தில் வெளிப்பட்ட சைவப் பெரும் புதையலில் கிடைத்த பண் குறிக்கப்பட்ட தேவார செப்பேடுகளை சைவ உலகமே இன்று மகிழ்ந்து கொண்டாடிவருகிறது.
இந்நிலையில் ஆயிரம் ஆண்டு தொடர்ச்சியாக மரபுவழியாக தேவாரப்பதிகங்களை பண்ணோடு இசைத்து பேணி பாதுகாத்து அதன் மூலம் தமிழுக்கும் ,சைவத்திற்கும், தமிழிசைக்கும் அருந்தொண்டாற்றிவரும் ஓதுவாமூர்த்திகள் பற்றி இவ்வேளையில் சிந்தித்தல் அவசியம்.
ஆலயங்கள் அமைத்து இறை வழிபாடு என்று தோன்றியதோ அன்றுமுதல் இன்றுவரை ஆலயங்களில் பண்ணோடு பாடும் முறை தமிழர்கள் வழிபாட்டு முறையில் இன்றியமையாது விளங்குகிறது. வழிபாட்டில் இசையானது இடம்பெற்றுள்ளதை சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு காப்பியங்கள், புராணங்கள் ,பக்தி இலக்கியங்கள் என அனைத்து இலக்கியங்களிலும் காணலாம்.
பக்தி இலக்கிய காலம் என அழைக்கப்படும் பல்லவர் காலத்தில் அருளாளர்கள் தோன்றி தமிழோடு இசை பாடி சைவத்தில் தேவாரப்பதிகங்களும்,வைணவத்தில் பாசுரங்களும் அருளினார்கள்.
தேவாரமுதலிகளான ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் பெருமான்.ஆகியோர் திருத்தலங்கள் தோறும் சென்று அத்தலங்கள் மீது பதிகங்கள் பாடியருளினார்கள். அன்றுமுதலே தேவாரப்பதிகங்களை தலங்களில் வழிபாடுகளில் பாடும் முறை ஏற்பட்டது. இதற்கு பல்லவ மன்னர்கள் பல நிவந்தங்கள் அளித்து போற்றினர் .
தேவாரம் பாடியவர்களை “ திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் என அழைக்கப்பட்டனர்.
பல்லவ மன்னனாகிய நந்திவர்ம பல்லவ மன்னனது 17ம் ஆட்சியாண்டில் (கி.பி.845) திருவல்லம் திருக்கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றில்
“திருப்பள்ளித்தாமம் பறிப்பார்க்கும் திருப்பதிகம் பாடுவருளிந்த பலபணி செய்வார்க்கு நெல்லு நானூற்றுக்காடியும் .
என்ற கல்வெட்டு மூலம் பல்லவர்காலத்திலேயே கோயில்களில் தேவாரம் ஓதுவதற்கு ஓதுவார்களை நியமித்து நிவந்தம் வழங்கிய முறை இருந்த செய்தியை அறியமுடிகிறது.
முற்சோழர் காலத்தில் திரு எறும்பியூர், பழுவூர், திருவாவடுதுறை, அந்தநல்லூர், வயலூர், ஆத்தூர், முதலிய தலங்களில் உள்ள திருக்கோயில்களில் திருப்பதிகங்கள் பாடப்பட்டுள்ளன,
முதலாம் இராஜராஜர் காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும். திருப்பதிகங்கள் பாடப்பட்டு வந்தன
சோழர்காலத்தில் திருப்பதிகம் பாடியவர்கள் பிடாரர்கள் என்று அழக்கப்பட்டு வந்தனர்.
தஞ்சைப் பெருங்கோயிலில் நாற்பத்தெட்டு பிடாரர்கள் நியமிக்கப்பட்டனர் இவர்கள் அனைவருமே சிவதீட்சை பெற்று சிவன் என்று முடியுமாறு பெயர் கொண்டுள்ளனர் . கல்வெட்டில் இவர்களது ஊர்பெயரும், இயற்பெயரும், தீட்சை பெற்ற பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் பாலன் திருவாஞ்சியத்தடிகளான இரசராசபிச்சனான சதாசிவன், திருவெண்ணாவல் செம்பொற்சோதியான தஷிணவிடங்கப் பிச்சனான ஞானசிவன், அரையன் அணுக்கன் திருமறைக்காடனான தர்மசிவன் ஆகியோர் தலைமைப்பாடகராக இருந்துள்ளனர்.
இவர்களுக்கு பக்க வாத்தியமாக உடுக்கை, கொட்டி மத்தளம் வாசிக்க கலைஞர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சோழர்காலத்தில் பல கல்வெட்டுக்களில் திருமுறை விண்ணப்பம் செய்ய பிடாரர்களை நியமித்த செய்தி நிறைந்து கிடக்கிறது. (அவற்றை தனியான ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். )
திருமுறை பாடிய மண்டபம் “திருமுறை கைக்கோட்டி மண்டபம் என்று அழைக்கப்பட்டது.
திருமுறை ஏடுகளை பாதுகாக்க விரகர் என்போர் பணியமர்த்தப்பட்டனர்.
திருமுறை பாடுவோரை கண்காணித்து தலைமைப்பாடகராக விளங்கியவர் “ தேவார நாயகம் “என அழைக்கப்பட்டனர்.
தாராசுரம் ஐராவதீசுவரர் ஆலயத்தில் திருப்பதிகம் பாடும் நுற்றியெட்டு பிடாரர்களின் சிலைகள்
அவர்களின் பெயர்களோடு உள்ளன . (இவை பிடாரர்கள் சிலை என்று அறிவித்தவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள். )
குலசேகரப்பட்டினம் சிவன் கோவிலில் நான்கு ஓதுவார்களின் சிலைகளும் அவர்களது பெயர்களும் உள்ளது.
சோழர்காலத்தின் பின்புதான் திருப்பதிகம் பாடுவோரை ஓதுவார் என்றும் ஓதுவாமூர்த்திகள் என்றும் அழைக்கும் முறை ஏற்பட்டது. இவர்களை பண்டாரம் என்றும் அழைக்கும் முறை இருந்துள்ளது.
நாயக்கர் காலத்திலும் ஓதுவார்களுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டு ஆலயங்களில் திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டன.
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை ஆலயத்தில் திருமுறைப்பணி செய்வதற்கு அலங்கார ஓதுவார் மரபில் வந்த தாண்டவமூர்த்தி ஓதுவாருக்கு நாயக்க மன்னர் ‘ஓதுவார் செங்குளம் என்ற கிராமத்தை நிவந்தமாக சாசனம் செய்து கொடுத்துள்ளார் இன்றும் அந்த பரம்பரையில் உள்ளவர்களே மதுரை ஆலயத்தில் பணி செய்து வருகிறார்கள் சமீபத்தில் சிவனடி எய்திய மதுரை குருசாமி தேசிகர் இந்த பரம்பரையின் 18 வது தலைமுறையை சேர்ந்தவர் ஆவர்.இந்தகுடும்பத்தினரிடம் நாயக்க மன்னர் அளித்த செப்புப்பட்டயம் இன்றும் உள்ளது.
இன்றுள்ள ஓதுவார் பரம்பரையில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது மதுரை குருசாமி தேசிகர் பரம்பரையாகும்.
அடுத்த நீண்ட மரபினைக்கொண்டது திருவாவடுதுறை பொன்னோதுவார் மரபு. திருவாவடுதுறை ஆதீனத்தில் தலைமுறையாகப் திருமுறைப்பணி செய்தவர்கள். இவர்களிடம் தேவார பண்களுக்கிணையான இராகக்குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருந்தன தமிழிசைச்சங்கத்தின் பண்ணாராய்ச்சி மாநாடுகளில் இவை ஆய்வுசெய்யப்பட்டன.
இந்த மரபில் வந்த மாணிக்க ஓதுவார் என்பவரே இந்தியா சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனம் சார்பாக சென்று செங்கோல் அளிக்கப்பட்ட போது ‘வேயுறு தோளி பங்கன் “ என்ற பதிகத்தினை பாடியவர் அவார்.
*திருநெல்வேலி சாலிவடீசுவர ஓதுவார் மரபு,
*விருத்தாச்சலம் சாமிநாதமுதலியார் மரபு, ,
*திருக்களர் சுப்பையா தேசிகர்
,*அடங்கன் முறை அருணாசல தேசிகர்,
*குலசேகரப்பட்டினம் அப்பாசாமி ஓதுவார்
*M.M.தண்ட பாணி தேசிகர்
*தருமபுரம் வேலாயுத ஓதுவார்,
*திருக்கடையூர் சாமி ஐயா தேசிகர்
திருவாவடுதுறை *சோமசுந்தர தேசிகர்
*தேவூர் சந்திரகாச தேசிகர்
*பழனி குமாரசுவாமி தேசிகர்
*இஞ்சிக்குடி சொக்கலிங்க தேசிகர்
* சீர்காழி திருஞான சம்பந்த ஓதுவார்
*மதுக்கூர் ஞானப்பிரகாசம் ஓதுவார்
*மதுரை பொன் முத்தையா ஓதுவார்
ஆகிய ஓதுவாமூர்த்திகள் கடந்த நூற்றாண்டுவரை மரபுவழியாக திருமுறை ஓதும் பணி செய்தவர்கள் , இன்றும் இவர்கள் வழி வந்த மரபினரே திருமுறைப்பணி செய்துவருகிறார்கள்.
தற்காலம் முதுபெரும் ஓதுவா மூர்த்திகளாக திகழ்பவர்கள்
திருப்பனந்தாள் முத்துக்கந்த ஓதுவாமூர்த்திகள்,
சிதம்பரம் ஞானப்பிரகாச ஓதுவார்
வயலூர் திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்திகள்,
திருத்தணி சுவாமிநாத ஓதுவார்,
பழனி சண்முக சுந்தர ஓதுவார்
திருப்பரங்குன்றம் திருஞானசம்பந்த ஓதுவார், சுப்பிரமணிய ஓதுவார்
லண்டன் சுவாமி தண்டபாணி ஓதுவார்
சிங்கப்பூர் வைத்தியநாத ஓதுவார்.
இவர்களின் மரபு வழி வந்த ஓதுவார்களே தற்காலம் பணியில் இருப்பவர்கள்.
பழனி வெங்கடேச ஓதுவார்
கரூர் சுவாமிநாதன் ஓதுவார்
மயிலை சத்குரு ஓதுவார்,
வயலூர் முனைவர் திருஞான. பாலச்சந்தர் ஓதுவார்
மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார்
மயிலாடுதுறை சோ.சிவகுமார் ஓதுவார்
கரிவலம் வந்தநல்லூர் திருமுருக.சுந்தர் ஓதுவார்
சிவகாசி ரமேஸ் ஓதுவார்
ஆகியோருடன்
இன்னும் பல இளம் ஓதுவார்களும் தற்காலம் திருமுறை ஓதும் பணியில் இருக்கும் ஓதுவாமூர்த்திகள் ஆவர்.
ஓதுவாமூர்த்திகளின் பெருமைகள்
# சங்ககாலம் முதல் பாணர், பாடினி, விறலியர், பொருநர், கிணையர், கோடியர், வயிரியர், கூத்தர், மாகதர்கள் போன்ற பல்வேறு தமிழ் இசைக்கலைஞர்கள் வாழ்ந்த தமிழகத்தில் எஞ்சி இருப்பவர் சோழர் காலத்தில் பிடாரர் என்று அழைக்கப்பட்ட ஓதுவார்கள் தான் தற்காலம் எஞ்சியிருக்கும் தமிழிசைக்கலைஞர்கள்
# ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு மரபுத்தொடர்ச்சியாக பண்ணிசைப்பணி செய்யும் மரபு உலகில் வேறு எந்த இனத்திலும் கிடையாது.
# தொன்மையான தமிழிசை மரபினை இன்றுவரை அதன் இயல்பு மாறாது காத்து வருபர்கள் ஓதுவார்கள்.
# அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் பன்ணாராய்ச்சி மாநாடுகளில் பழம் பண்களுக்கான தற்கால இராகங்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஓதுவார்கள் மிக முக்கிய பாகம் வகித்தனர் இன்றுவரை இப்பணி தொடர்கிறது
# 13ம் நூற்றாண்டில் கர்நாடக சங்கீதம் தோற்றம் பெற்று தமிழக இசை மரபு பல மாற்றங்கள் பெற்றாலும் சங்ககாலப் பண்ணிசை மரபை இன்றுவரை அதன் இயல்பு மாறாது தேவாரப்பாடல்கள்மூலம் காத்து வருபவர்கள் ஓதுவார்கள்
# தமிழிலேயே மட்டும் பாடும் தொன்மையான உண்மையான தமிழிசைக்கலைஞர்கள்.
# வேதம் ஆகமம் குருகுலமாக பயில்வதை போன்றே , தேவாரப் பாடசாலைகளில் ஓதுவார்கள் சிறுவயதில் தாய் தந்தையை, குடும்பத்தினரை பிரிந்து குருகுலமாக தேவாரம் பயில்கிறார்கள்.
# தமிழுக்கும், சைவத்திற்கும், தமிழிசைக்கும் ஒருசேரப் பணியாற்றுபவர்கள்
# குறிப்பட்ட சமூக வேறுபாடு இன்றி அனைத்து சமூகத்தினரும் ஓதுவாராக விளங்கியுள்ளனர்.
# தமிழகத்தில் அந்நிய படையெடுப்பு காலத்தில் ஆலயங்களில் பூசைகள் நடைபெறாமல் விக்கிரகங்களை, தேவார செப்பேடுகளை, மக்கள் மண்ணில் புதைத்து பாதுகாத்த போது , தேவாரப் பதிகங்களை பனையோலைகளில் எழுதி பாதுகாத்தவர்கள் இந்த ஓதுவாமூர்த்திகள் ,அவற்றை விற்று அதில் வந்த சொற்ப வருமானத்தில் தம் வாழ்வாதாரத்தினை எதிர்கொண்ட போதும் வேறு தொழிலுக்குச் செல்லாதவர்கள்.
# இதே கால கட்டத்தில் மக்கள் மத்தியில் அந்திமக்கிரியைகளின் போது மட்டுமே திருமுறைகள் பாடப்பட்டுவந்தன அந்நிலையை பிற்கால ஓதுவார்கள் மாற்றி மங்கல நிகழ்வுகளிலும் பாடத்துவங்கினர். இந்த மாற்றத்திற்காக மிகுந்த சிரமங்களையும் பொறுத்து வந்துள்ளனர்.
# இசைத்திறண் இருந்தும் பணத்திற்காகவோ , பரிசில்களுக்காகவோ பிறமொழிப்பாடல்களையோ, சினிமாப்பாடல்களையோ எங்கும் பாடாதவர்கள்.
# மக்கள் துயர் தீர்ப்பதற்கும் திருமுறைகளை வின்ணப்பம் செய்தவர்கள்
# கொடிய நோய் தீரவும், மழைவேண்டியும், நாட்டு நலன் கருதிப்பாடி பலனும் கண்டுள்ளனர் .( இன்றும் மழை வேண்டி ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் செய்தால் மழை பெய்யும் அதிசயத்தை காணலாம்)
# தமிழகத்தில் ஏற்பட்ட நாத்திக தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட போதும், தமது மரபை கைவிடாது போற்றியவர்கள் ஓதுவா மூர்த்திகள்.
இன்றைய நிலை
# சைவ உலகம் ஓதுவார்களை ஆதரித்து வந்தபோதும்,
இந்த பண்ணிசை மரபினர் இன்றுவரை தமது மரபினை காக்க பல்வேறு இடர்களை சகித்துக்கொண்டுதான் வாழ்கின்றனர்.
# நகரத்தார்களும் , ஆதீனங்களும்,அடியார் பெருமக்களும் ஓதுவார்களை போற்றிவருகின்றனர்.
# ஒருகாலத்தில் தமிழக கோவில் முழுதும் தேவாரம் ஓதும் அரசுப் பணியாளர்களாக அதிக சம்பளத்துடன் பணியாற்றியவர்கள் விளங்கியவர்கள்
இன்று சில முக்கிய கோயில்களில் மட்டும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.
# தமிழிசையில் இருந்து தோன்றிய கர்நாடக சங்கீதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பண்ணிசைக்கு வழங்கப்படுவதில்லை.
# ஓதுவார்களை இசைக்கலைஞர்களாகவும் பார்க்கப்படாமல் ஆன்மீகப் பணியாளர்களாகவே பர்க்கப்படுகின்றனர்.
# கர்நாடக சங்கீதத்திற்கு தாய் இசையாக விளங்குவது தேவார இசை. அனால் கர்நாடக சங்கீத சபாக்களில் பஜனை சம்பிரதாயத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் கூட ஓதுவாமூர்த்திகளுக்கு தேவாரம் இசைக்க வழங்கப்படுவதில்லை சில நேரங்களில் மிக அபூர்வமாகவே நடைபெறுகிறது.
# சங்கீத நாடக அக்கடமியின் டி.டி.கே விருதினை திருப்பனந்தாள் முத்துக்கந்த ஓதுவார் மட்டுமே பெற்றநிலையில் பல வருடங்கள் கழித்து இந்த வருடம் மயிலை சத்குரு ஓதுவாருக்கு வழங்கப்படவுள்ளது.
# தேவார இசை அரங்குகள் தனியாகவே நடைபெறுகிறது.
# சைவ ஆதீனங்கள், தமிழிசைச்சங்கம், பல சைவ அமைப்புகள் மூலமே ஓதுவார்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசின் இசைக்கலைஞர்களுக்கான விருதுகளில் கலைமாமணி விருது ஓதுவார்களுக்கு அபூர்வமாகவே வழங்கப்படுகிறது.
# உலகம் தோறும் நடைபெறும் தமிழிசை மாநாடுகளில் மரபு வழி வந்த ஓதுவார்களுக்கு அழைப்பும் இல்லை எந்த விருதுகளும் வழங்கப்படுவதில்லை.
# மத்திய அரசின் கலைஞர்களுக்கான உயர்விருதுகளான “பத்ம”விருதுகள் இதுவரை ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட ஓதுவர்கள் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை என்பது வேதனையான விடயம், மத்திய அரசிற்கு தமிழகத்திலிருந்து எடுத்துச் சொல்வார் யாரும் இல்லை.
# அகில இந்திய வானொலியில் தேவார இசைக்கலைஞர்களுக்கு , கர்நாடக இசைக்கு நிகரான நிலை வழங்கப்படவில்லை. மெல்லிசைப்பாடல் பிரிவிலேயே ஓதுவார்களுக்கு கிரேட் வழங்கப்படுகிறது.
# அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும், அரசு இசைப்பள்ளிகளிலும் தேவார பட்டயப் படிப்பு மட்டுமே உள்ளன .
# தேவாரத்தில் உயர்கல்வி இதுவரை தமிழகத்தில் இல்லை
# தேவார இசையின் பெருமையை உணர்ந்து போற்றும் இலங்கை மன்ணில் தேவாரத்திற்காக உயர்கல்வி உள்ளது. நாவலர் பெருமான் வழி நிற்கும் மக்கள் பல வழிகளிலே தேவார இசையை போற்றி வருகின்றனர் உலகிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மட்டுமே தேவாரத்திற்கு இளங்கலைப்பட்டப் படிப்பு உள்ளது.
இலங்கை இந்துகாலசார அமைச்சு நாடுமுழுவதிலும் ஓதுவார் மரபுவழி பண்ணிசைப் பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
# இலங்கை, மலேசியா,சிங்கப்பூர், ,அவுஸ்ரேலியா நாடுகளில் வாழும் தமிழர்கள் ஓதுவார்களின் பெருமை உணர்ந்து அவர்களை போற்றிவருகின்றனர்.
# இன்று ஓதுவார்கள் பல இடர்கள் மத்தியிலும் உள் நாட்டிலும் , வெளிநாடுகளுக்கு சென்றும் பல அரங்குகளிலும், இணையங்களிலும் தேவார இசையை ஏற்றுப்போற்றிவருகிறார்கள்
# மரபு வழி வந்த ஓதுவாமூர்த்திகளின் வரலாறை ஆராய்ந்து “ஓதுவா மூர்த்திகள் வளார்த்த பன்ணிசை மரபு “ என்னும் தலைப்பில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் தி. பாலச்சந்திர ஓதுவார் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
# மரபுவழி தமிழிசையை போற்றவேண்டுமாகில் பண்ணோடு இசை பாடிவரும் ஓதுவாமூர்த்திகளை தமிழர்களும், அரசும் , குறிப்பாக இசைக்கலைஞர்களும் இவர்களை ஆதரித்தல் அவசியம் . இல்லாவிடின் தொன்மையான தமிழிசை மரபு அழிவிற்குச் சென்றுவிடும்
# இன்று பலர் தேவாரங்களை பாடி வந்தாலும் மரபுவழி வந்த, தேவாரப்பாடசாலைகளில் பயின்ற ஓதுவார்களின் இசைத்திறண் பழமையானது, தனித்துவமானது.
இன்று உலகில் உள்ள இசை வடிவங்களில் தொன்மையான இசைவடிவம் தேவாரங்கள்,
முதல் பதிகம் பாடியவர் காரைக்கால் அம்மையார்,
மூத்த இசையமைபாளர் வள்ளியம்மையார்,
நீண்ட பாரம்பரியம் கொண்ட இசைக்கலைஞர்கள் ஓதுவாமூர்த்திகள்.
என்ற கருத்தினை தமிழர்கள் யாரும் மறவாது இருப்போம்.
ஓதுவாமூர்த்திகளின் பெருமையுணர்ந்து அவர்கள் வழி நின்று தமிழிசை காப்போம்.🙏🙏🙏
இக்கட்டுரையில் உள்ள ஓதுவாமூர்த்திகளின் விபரங்கள் முனைவர் பாலச்சந்திர ஓதுவார் அவர்களின் ஆய்வேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது அவர்களது ஆய்வேட்டில்
200 இற்கு மேற்பட்ட ஓதுவார்கள் பற்றிய விரிவான ஆய்வுச்செய்திகள் உள்ளன. இக்கட்டுரையின் விரிவு கருதி முக்கியமான ஓதுவார்கள் பற்றியே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டுரையில் விடுபட்ட ஓதுவாமூர்த்திகள், இளம் ஓதுவாமூர்த்திகள் பற்றிய விரிவான செய்திகள் இணைக்கப்படும்
திருச்சிற்றம்பலம்