பண்ணமை சிலம்பு
பழந்தமிழ் கலை மரபுகளை உள்ளடக்கிய பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்.இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்ச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு காலங்களைக்கடந்து தமிழ்க்கலைகளின் பெருமைகளை உணர்த்தி நிற்கிறது.
சிலம்பு கூறும் தமிழ் இசை மரபினை பல அறிஞர்கள் ஆய்வு செய்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் அண்ணாமலைப்பல்கலை இசைத்துறை முன்னாள் பேராசிரியர் வீணை வித்துவான்..கலைமாமணி வா.சு.கோமதி சங்கர ஐயர் அவர்களின் சிலம்பு பற்றிய ஆய்வான வட்டப்பாலையின் விளக்கத்தை சிலம்பு என்ற அணிகலனை ஆதாரமாக கொண்டு விளக்கியுள்ளமையை ” பண்ணமை சிலம்பு” என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டு இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது..
கலைமாமணி வா.சு.கோமதிசங்கர ஐயர்
கலைமாமணி வா.சு.கோமதிசங்கர ஐயர் அவர்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகாலம் வீணைப்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் செயல்வீரராகத் திகழ்ந்தவர்.தமிழில் பிரபந்தம் எனும் அரிய உருப்படியை இயற்றியுள்ளார்.
மற்றும் தமிழ் கீதம்,வர்ணம் போன்ற உருப்படியும், திருக்குறளை இயலாகக் கொண்டு 40 திருக்குறள் வர்ணங்களையும் இயற்றியுள்ளார்.
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 21 தமிழிசப்பாடல்கள் கொண்ட தொகுதியில் 11 நூல்களில் பாடல்களை இயற்றியும்,இசையமைத்தும்,மதிப்பீடு செய்தும் பணியாற்றியுள்ளார்.தமிழிசையையே தமது மூச்சாக கொண்டு பல ஆய்வுகளை செய்து ஆய்வுக்கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளியிட்டுளார்.
அத வகையில் சிலப்பதிகாரம் பற்றிய இவருடைய ஆய்வுகள் மிகச்சிறப்பனவை. “கானல் வரி” என்ற கோமதி சங்கர ஐயரின் நூலில் சிலப்பதிகார இசைச்செய்திகளை ”நுண்மான் நுழை புலன் அறிவுடன்” ஆய்வு செய்துள்ளார்.
இந்நூலில் கோமதி சங்கர ஐயரின் ஆய்வு முடிவுகள் யாதெனில்
1. சிலப்பதிகாரம் ஒரு இசை நூல்
2. யாழ் என்பது தற்போதய வீணை
3.கோவலனும் மாதவிக்கும் இடையே இசை அடிப்படையாலேயே பிரிவு ஏற்பட்டது
4. சிலம்பு என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பை உணர்த்துகிறது.
இவற்றுள் சிலம்பு என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பை உணர்த்தி நிற்கும் தன்மையை இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.
சிலம்பும் வட்டப்பாலையும்
வட்டப்பாலை
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் பாலைகள் (தாய்ராகங்கள்) தோன்றும் முறையை விளக்குகின்றார். பாலைகள் என்பது ஏழு நரம்புகள் கொண்ட ஒரு அமைப்பு இப்பாலைகளை பெற நான்கு முறைகள் கூறப்படுகின்றன. அவை ஆயப்பாலை,சதுரப்பாலை,திரிகோணப்பாலை,வட்டப்பாலை. என்பவையாகும். இவற்றுள் வட்டப்பாலை பற்றிய அடியார்க்கு நல்லாரின் விளக்கம் யாதெனில்
ஒரு வட்டமானது சாணளவில் வரையப்பட்டு அதில் கிழக்கு,மேற்கு,வடக்கு தெற்கு ஆகிய திசைகளை நான்கு பகுதியாகப்பிரித்து நான்கு கோடுகள் வரைந்து மேலும் ஒவ்வொரு கோணத்திலும் இரு கோடிட்டு 12 பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலிலும் பன்னிரண்டு இராசிகள் நிறுத்துகிறார். இவற்றுள் கிழக்கு பகுதியில் துலா இராசியை நிறுத்தி ஏனைய இராசிகள் வரிசையாக நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு பிரித்த இராசிகளில் ஏழு நரம்புகளை இடுவதற்கான சூத்திரத்தை கூறுகிறார்.
சொல்லிய கோள் குரல் துத்தம்
துத்தம் தனுவாகும் -மெல்லியல்
கும்பம் கிளையென்றால்- நல்ல
உழையாகும் மீனம் -இளி இடபம்
நண்டு விளரி தாரம் சீயமாம்.
துலா ராசியில் குரல்(ஸ), தனுசு இராசில் துத்தம்(ரி), கும்ப ராசியில் கைக்கிளை(க) மீன இராசியில் உழை(ம) இடப இராசியில் இளி(ப), கடக இராசியில் விளரி(த) சிம்ம இராசியில் தாரம்( நி) ஆகிய நரம்புகளை வைத்து பாலை யாழின் தோற்றத்தை விளக்குகிறார். இந்த பாலை யாழானது தற்போது ஹரிக்காம்போதி என அழைக்கப்படும் இராகமாகும்.
இந்த பாலையாழிலிருந்து குரல் திரிபு மூலம் ஏழ்பெரும் பாலைகள் பிறக்கின்றன இதை அடியார்க்கு நல்லாரின் சூத்திரத்தை வைத்து பல ஆய்வாளார்கள் ஒவ்வொரு வழிகளை கையாண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஆப்ரஹாம்பண்டிதர், விபுலானந்த அடிகள் ,டாக்டர் எஸ்.இராமநாதன்,டாக்டர்.வி.ப.காமாட்சி சுந்தரம்,ஆகியோர் ஆவர்.
மேற்கண்ட அறிஞர்கள் சிலப்பதிகார செய்யுள்களையும், அடியார்க்கு நல்லாரின் உரை ஆகியவற்றை வைத்து தமது வட்டப்பாலை பற்றிய ஆய்வினை நிகழ்த்திய போது.
வா.சு கோமதிசங்கர ஐயர் இந்த வட்டப்பாலையை ஆய்வு செய்து புதிய கருத்தொன்றை முன்வைக்கிறார்.
சிலம்பு என்ற ஆபரணத்தின் அமைப்போடு வட்டப்பாலையை தொடர்பு படுத்தி ஆய்வினை மேற்கொள்கிறார்.
சிலம்பு என்ற ஆபரணத்தின் செய்முறையை நூல்கள் வழி ஆய்வு செய்தும்,அனுபவ வழி அறிந்தும் விளக்குகிறார்’
கோமதி சங்கர ஐயரின் தந்தையார் பல்லவி சுப்பையா பாகவதர் அவர்களின் குருநாதராகிய மாஹாவைத்திய நாத சிவன் அவர்களைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்பினை எழுதி வைத்துள்ளார். அதில் ”கருணாலயப்பாண்டித்தேவர்” என்னும் ஜமீந்தார் மஹாவைத்தியநாத சிவனுக்கு காற் சிலம்புகளைப் பரிசாக அளிக்கிறார்.அச்சிலம்புகளை மஹாவைத்தியநாத சிவனின் மறைவிற்குப்பிறகு அவரது தந்தையார் வேறு தேவைக்காக அழிக்கும் பொருட்டு உருக்குவதற்காக பிரித்துப்பார்க்குமிடத்தில் அதில் பன்னிரண்டு தடுப்பறைகளையும், அவற்றுள் ஏழு அறைகளில் ஏழு மாணிக்கப்பரல்களையும் கொண்டதாக இருந்துள்ளது இதனை நேரில் பார்த்த பல்லவி சுப்பயா பாகவதர் அதனை குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இவ்வாறு தம் தந்தையின் குறிப்பினைக்கொண்டு வட்டப்பாலை அமைப்புடன் விளக்குகிறார்
சிலம்புக்குழலில் காணப்படும் பன்னிரண்டு தடுப்புகள் பன்னிரண்டு இராசிகளைக் குறிக்கின்றன இவை இசைக்குரிய பன்னிரண்டு தானங்களையும் குறிக்கின்றன இவற்றுள் ஏழு தடுப்புக்களுள் முத்து அல்லது மாணிக்கப்பரல்கள் இடப்பட்டிருப்பது ஏழு நரம்புகளைக் குறிக்கின்றன. ஒரு தடுப்பிற்கும் மற்றொரு தடுப்பிற்குமிடையே இடவெளித்தடுப்பறைகள் இருப்பதால் நாத ஒலி சீராக எழுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.
முத்து அல்லது மாணிக்கப்பரல்களை தடுப்பறைகளில் இடும்போது 1,3,5,7,8,10,12 ம் அறைகளில் இடப்பட்டிருக்கிறது. இவற்றில் முதலாவது அறையில் சிங்கமுகம் பொறிக்கப்பட்டிருக்கும். இது சிலம்பு ஆபரணத்தின் விதியாகும். சிங்கமுகம் பொறித்த தடுப்பை சிம்ம ராசியாக் கொண்டல் ஏனைய பரல்கள் இடப்பட தடுப்பறைகள் முறையே சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம் ஆகிய இராசிகளைக்குறிக்கின்றன.
இந்த எழிசை நரம்புகள் வட்டப்பாலையின் சூத்திரத்தின்படி 4 4 3 2 4 3 2 என்ற இடைவெளி மாத்திரை அமைப்பில் முறையே
முதலாவது தடுப்பறை - சிம்மராசி -தாரம்( நி1 )
மூன்றாவது தடுப்பறை- துலாராசி-குரல் (ஸ)
ஐந்தாவது தடுப்பறை - தனுசுராசி - துத்தம்(ரி2)
ஏழாவது தடுப்பறை - கும்பராசி - கைக்கிளை-(க2)
எட்டாவது தடுப்பறை- மீனராசி -உழை-(ம1)
பத்தாவது தடுப்பறை-இடபராசி-இளி-(ப)
பன்னிரண்டாவது தடுப்பறை-கடகராசி-விளரி(த2)
இந்த அமைப்பில் குரலிலிருந்து நரம்புகளை(சுரத்தானங்களை) வரிசைப்படுத்தினால் கிடைப்பது பாலை யாழ் எனப்படும் ஹரிக்காம்போதி இராகம் ஆகும் .இவ்வாறு சிலம்பு என்ற ஆபரணம் பண்ணை தோற்றுவிக்கும் அமைப்புடன் விளங்கியிருந்தால் ”பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி” என்ற இலக்கியக்குறிப்பை மேற்கோள் காட்டி சிலம்பு ஒரு இசை நூல் என நிறுவுகிறார்.
முனைவர். சிவகௌரி கிரீஷ்குமார்.