தமிழோடு இசைப்பாடல்...
ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023
திருப்பதிகம் விண்ணப்பம் செய்வார்
தமிழிசை ஆய்வாளர் வா.சு.கோமதிசங்கர ஐயர்,
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
தேவாரப்பண்கள்
தென்னக இசையில் ராகங்கள் என அழைக்கப்படும் இனிய இசைக்கோர்வைகளையே பழந்தமிழிசையில் பண்கள் என அழைக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் நூற்றிமூன்று பண்கள் வழக்கிலிருந்ததாக குறிப்புகள் காண ப்படுகின்றன.
பண்களில் பாடப்பெற்ற ஏராளமான பழந்தமிழ்ப் பாடல்களில் இன்றளவும் பழைய பாடுமுறை மாறாமல் இசைக்கப்படும் பாடல்கள் தேவாரங்கள் மட்டுமேயாகும். முதலில் கிடைக்கும் பண்ணிசை வடிவம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்கள் ஆகும். பண்களை அடிப்படையாக கொண்ட இசை என்பதால் ’பண்ணிசை என்று ’ அழைக்கப்படுகிறது.
தேவாரப்பண்கள்
பக்தி உணர்வு பொங்கி நாடெங்கும் எழுச்சி பெற்ற பல்லவர் காலப்பகுதியில் தமிழ் நாட்டுக்கோயில்கள் தோறும் சென்று இனிமைமிகு பண்களில் தேவாரப்பதிகங்களைப்பாடிய நாயன்மார்கள் இசையோடு பக்தி நெறிபுகட்டினார்கள். சங்ககால தமிழிசை மரபினை மீட்டெடுத்தனர்.
திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி நாயனார்,ஆகிய சைவ நாயன்மார் மூவரும் இறைவனை வாழ்த்தி பண்ணோடு பாடிய வாரப்பாடல்களே தேவரங்கள் ஆகும்.
மூவரும் தமது தேவாரப்பாடல்களில் பண்பற்றிய குறிப்புகளை ஏராளமாக தந்துள்ளனர்.உதாரணமாக
‘பண்ணோடு இசை பாடிய பத்தும்”என்று சம்பந்தப்பெருமானும்,
“பண்னுடை பாடலோடும் பரமா நீ ஆடுமாறே”என்று அப்பர் பெருமானும்,
"பண்ணார் இசைகளது கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்” என்று சுந்தரர் பெருமானும் தமது பாடல்களில் பண்ணிசையின் சிறப்பினை உணர்த்தியுள்ளனர்.
இவர்கள்பாடிய ஏராளமான பாடல்கள் பிற்காலத்தில் இராஜராஜ சோழ மன்னனின் பெரு முயற்சியோடு , திரு நாரையூர் பொள்ளாப்பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் துணையால் விநாயகப்பெருமானின் அருள்வாக்கின்படி சிதம்பரத்தில் கண்டெடுக்கப்பட்டது.இறைவனின் ஆணைப்படி பாணர்மரபில் வந்த பெண் ஒருவரால் பண்வகுக்கப்பட்டது.
எனும் வரலாறு திருமுறை கண்ட புராணத்தில் காணப்படுகிறது.
பண்கள் வகுத்துப்பாடப்பெறும் தேவாரப்பாடல்கள் ‘பண்ணாங்கப்பாடல்கள்;என அழைக்கப்படும்.
மூவர் பாடிய தேவாரப்பதிகங்களில் காணப்படும் பண்கள்
1.செவ்வழி
2.தக்கராகம்
3.புறநீர்மை
4.பஞ்சமம்
5. நட்டபாடை
6.அந்தாளிக்குறிஞ்சி
7.காந்தாரம்
8.பழம்பஞ்சுரம்
9.மேகராகக்குறிஞ்சி
10.கொல்லிக்கௌவானம்
11.பழந்தக்கராகம்
12.குறிஞ்சி
13. நட்டராகம்
14.வியாழக்குறிஞ்சி
15.செந்துருத்தி
16.தக்கேசி
17.கொல்லி
18.காந்தாரப்பஞ்சமம்
19.இந்தளம்.
20.கௌசிகம்
21.பியந்தைக்காந்தாரம்.
22.சீகாமரம்
23.சாதாரி
24.யாழ்முரீ
என்பவையாகும். இவற்றுள் யாழ்முரீ என்பது பண் என்றும் ,ஒரு வகையான இசை முறையென்றும் இரு கருத்துக்கள் உள்ளன
தமிழிசை 13ம் நூற்றாண்டில் பிறமொழிக் கலப்பினால் சில மாற்றங்களுக்கு உட்பட்டு “கர்நாடக இசை “ என பெயர் மாற்றம் பெற்றது. இதனால் தமிழ்ப் .பண்களின் பெயர்கள் யாவும் வடமொழியில் பெயர்மாற்றம் பெற்றன.அதன் பின்னரே பண்களை இராகங்கள் என அழைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது. திருமுறை இசைக்கும் ஓதுவார் மரபினரே தமிழிசையை மாற்றங்களுக்கு உட்படுத்தாமல் சோழர் காலம் முதல் பாதுகாத்து வந்தனர் . கர்நாடக சங்கீதம் தோன்றிய பின் தமிழிசையை பண்ணிசை என அழைக்கப்படும் மரபு ஏற்பட்டது.
அண்ணாமலைச்செட்டியாரால் தமிழிசையை போற்றிப்பாதுகாப்பதற்காக 1940ம் ஆண்டு தமிழிசைச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் ஓதுவார் பெருமக்களையும் இசை விற்பன்னர்களையும் அழைத்து பண்ணாராய்ச்சி மாநாடுகளை நடாத்தினார். பண்களின் தற்கால பெயர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் பண்ணாராய்ச்சி முடிவுகள் அறிக்கைகளில் வெளியிடப்பட்டது. அவற்றின் விபரங்கள் வருமாறு
பண்களின் பெயர்கள் அவற்றின் தற்காலப்பெயர்கள்
1.செவ்வழி - யதுகுலகாம்போதி23
2.தக்கராகம் - காம்போதி
3.புறநீர்மை - பூபாளம்.21
4.பஞ்சமம் - ஆகிரி20
5. நட்டபாடை - கம்பீரநாட்டை19
6.அந்தாளிக்குறிஞ்சி - சாமா18
7.காந்தாரம் - நவரோசு
8.பழம்பஞ்சுரம் - சங்கராபரணம்16
9.மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி15
10.கொல்லிக்கௌவானம் - நவரோஜ்
11.பழந்தக்கராகம் - ஆரபி14
12.குறிஞ்சி - ஹரிக்காம்போஜி13
13. நட்டராகம் - பந்துவராளி
14.வியாழக்குறிஞ்சி - சௌராஷ்டிரம்11
15.செந்துருத்தி - மத்தியமாவதி10
16.தக்கேசி - காம்போதி9
17.கொல்லி - நவரோஜ்
18.காந்தாரப்பஞ்சமம் -கேதாரகௌளை7
19.இந்தளம். - மாயாமாளவகௌளை6
20.கௌசிகம் - பைரவி5
21.பியந்தைக்காந்தாரம்.- நவரோஜ்4
22.சீகாமரம் - நாதநாமக்கிரியை3
23.சாதாரி - பந்துவராளி2
24.யாழ்முரீ - அடாணா
இவ்வாறு தேவாரப்பண்களின் தற்கால இராகப்பெயர்கள் கண்டறியப்பட்டன.இம்முடிவுகளில் சில வேறுபாடுகள் உள்ளதாக தமிழிசை ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுகின்றனர். உதாரணமாக யாழ்முரீீப் பண் என்பது நீலாம்பரி இராகம் என முடிவு செய்யப்பட்ட போதிலும் பெரும்பாலான ஓதுவார்களால் "அடாணா" இராகத்தில் பாடப்பட்டு வருகிறது. தமிழிசை ஆய்வாளர் வா. சு. கோமதி சங்கர ஐயர் அவர்கள் யாழ் முரீீீப்பண் என்பது அடாணா இராகத்தையே குறிக்கிறது என்பதை சிலப்பதிகாரத்தின் துணையுடன் நிறுவியுள்ளார். இது போன்று பழந்தமிழ்ப் பண்கள் அனைைத்தும் முறையான ஆய்வுகள் மூலம் வெளிவரல் வேண்டும் என்பது தமிழிசை ஆர்வலர்களின் விருப்பமாகும்.
ஞாயிறு, 14 அக்டோபர், 2018
பண்ணமை சிலம்பு
பண்ணமை சிலம்பு
பழந்தமிழ் கலை மரபுகளை உள்ளடக்கிய பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்.இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்ச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு காலங்களைக்கடந்து தமிழ்க்கலைகளின் பெருமைகளை உணர்த்தி நிற்கிறது.
சிலம்பு கூறும் தமிழ் இசை மரபினை பல அறிஞர்கள் ஆய்வு செய்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் அண்ணாமலைப்பல்கலை இசைத்துறை முன்னாள் பேராசிரியர் வீணை வித்துவான்..கலைமாமணி வா.சு.கோமதி சங்கர ஐயர் அவர்களின் சிலம்பு பற்றிய ஆய்வான வட்டப்பாலையின் விளக்கத்தை சிலம்பு என்ற அணிகலனை ஆதாரமாக கொண்டு விளக்கியுள்ளமையை ” பண்ணமை சிலம்பு” என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டு இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது..
கலைமாமணி வா.சு.கோமதிசங்கர ஐயர்
கலைமாமணி வா.சு.கோமதிசங்கர ஐயர் அவர்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகாலம் வீணைப்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் செயல்வீரராகத் திகழ்ந்தவர்.தமிழில் பிரபந்தம் எனும் அரிய உருப்படியை இயற்றியுள்ளார்.
மற்றும் தமிழ் கீதம்,வர்ணம் போன்ற உருப்படியும், திருக்குறளை இயலாகக் கொண்டு 40 திருக்குறள் வர்ணங்களையும் இயற்றியுள்ளார்.
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 21 தமிழிசப்பாடல்கள் கொண்ட தொகுதியில் 11 நூல்களில் பாடல்களை இயற்றியும்,இசையமைத்தும்,மதிப்பீடு செய்தும் பணியாற்றியுள்ளார்.தமிழிசையையே தமது மூச்சாக கொண்டு பல ஆய்வுகளை செய்து ஆய்வுக்கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளியிட்டுளார்.
அத வகையில் சிலப்பதிகாரம் பற்றிய இவருடைய ஆய்வுகள் மிகச்சிறப்பனவை. “கானல் வரி” என்ற கோமதி சங்கர ஐயரின் நூலில் சிலப்பதிகார இசைச்செய்திகளை ”நுண்மான் நுழை புலன் அறிவுடன்” ஆய்வு செய்துள்ளார்.
இந்நூலில் கோமதி சங்கர ஐயரின் ஆய்வு முடிவுகள் யாதெனில்
1. சிலப்பதிகாரம் ஒரு இசை நூல்
2. யாழ் என்பது தற்போதய வீணை
3.கோவலனும் மாதவிக்கும் இடையே இசை அடிப்படையாலேயே பிரிவு ஏற்பட்டது
4. சிலம்பு என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பை உணர்த்துகிறது.
இவற்றுள் சிலம்பு என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பை உணர்த்தி நிற்கும் தன்மையை இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.
சிலம்பும் வட்டப்பாலையும்
வட்டப்பாலை
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் பாலைகள் (தாய்ராகங்கள்) தோன்றும் முறையை விளக்குகின்றார். பாலைகள் என்பது ஏழு நரம்புகள் கொண்ட ஒரு அமைப்பு இப்பாலைகளை பெற நான்கு முறைகள் கூறப்படுகின்றன. அவை ஆயப்பாலை,சதுரப்பாலை,திரிகோணப்பாலை,வட்டப்பாலை. என்பவையாகும். இவற்றுள் வட்டப்பாலை பற்றிய அடியார்க்கு நல்லாரின் விளக்கம் யாதெனில்
ஒரு வட்டமானது சாணளவில் வரையப்பட்டு அதில் கிழக்கு,மேற்கு,வடக்கு தெற்கு ஆகிய திசைகளை நான்கு பகுதியாகப்பிரித்து நான்கு கோடுகள் வரைந்து மேலும் ஒவ்வொரு கோணத்திலும் இரு கோடிட்டு 12 பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலிலும் பன்னிரண்டு இராசிகள் நிறுத்துகிறார். இவற்றுள் கிழக்கு பகுதியில் துலா இராசியை நிறுத்தி ஏனைய இராசிகள் வரிசையாக நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு பிரித்த இராசிகளில் ஏழு நரம்புகளை இடுவதற்கான சூத்திரத்தை கூறுகிறார்.
சொல்லிய கோள் குரல் துத்தம்
துத்தம் தனுவாகும் -மெல்லியல்
கும்பம் கிளையென்றால்- நல்ல
உழையாகும் மீனம் -இளி இடபம்
நண்டு விளரி தாரம் சீயமாம்.
துலா ராசியில் குரல்(ஸ), தனுசு இராசில் துத்தம்(ரி), கும்ப ராசியில் கைக்கிளை(க) மீன இராசியில் உழை(ம) இடப இராசியில் இளி(ப), கடக இராசியில் விளரி(த) சிம்ம இராசியில் தாரம்( நி) ஆகிய நரம்புகளை வைத்து பாலை யாழின் தோற்றத்தை விளக்குகிறார். இந்த பாலை யாழானது தற்போது ஹரிக்காம்போதி என அழைக்கப்படும் இராகமாகும்.
இந்த பாலையாழிலிருந்து குரல் திரிபு மூலம் ஏழ்பெரும் பாலைகள் பிறக்கின்றன இதை அடியார்க்கு நல்லாரின் சூத்திரத்தை வைத்து பல ஆய்வாளார்கள் ஒவ்வொரு வழிகளை கையாண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஆப்ரஹாம்பண்டிதர், விபுலானந்த அடிகள் ,டாக்டர் எஸ்.இராமநாதன்,டாக்டர்.வி.ப.காமாட்சி சுந்தரம்,ஆகியோர் ஆவர்.
மேற்கண்ட அறிஞர்கள் சிலப்பதிகார செய்யுள்களையும், அடியார்க்கு நல்லாரின் உரை ஆகியவற்றை வைத்து தமது வட்டப்பாலை பற்றிய ஆய்வினை நிகழ்த்திய போது.
வா.சு கோமதிசங்கர ஐயர் இந்த வட்டப்பாலையை ஆய்வு செய்து புதிய கருத்தொன்றை முன்வைக்கிறார்.
சிலம்பு என்ற ஆபரணத்தின் அமைப்போடு வட்டப்பாலையை தொடர்பு படுத்தி ஆய்வினை மேற்கொள்கிறார்.
சிலம்பு என்ற ஆபரணத்தின் செய்முறையை நூல்கள் வழி ஆய்வு செய்தும்,அனுபவ வழி அறிந்தும் விளக்குகிறார்’
கோமதி சங்கர ஐயரின் தந்தையார் பல்லவி சுப்பையா பாகவதர் அவர்களின் குருநாதராகிய மாஹாவைத்திய நாத சிவன் அவர்களைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்பினை எழுதி வைத்துள்ளார். அதில் ”கருணாலயப்பாண்டித்தேவர்” என்னும் ஜமீந்தார் மஹாவைத்தியநாத சிவனுக்கு காற் சிலம்புகளைப் பரிசாக அளிக்கிறார்.அச்சிலம்புகளை மஹாவைத்தியநாத சிவனின் மறைவிற்குப்பிறகு அவரது தந்தையார் வேறு தேவைக்காக அழிக்கும் பொருட்டு உருக்குவதற்காக பிரித்துப்பார்க்குமிடத்தில் அதில் பன்னிரண்டு தடுப்பறைகளையும், அவற்றுள் ஏழு அறைகளில் ஏழு மாணிக்கப்பரல்களையும் கொண்டதாக இருந்துள்ளது இதனை நேரில் பார்த்த பல்லவி சுப்பயா பாகவதர் அதனை குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இவ்வாறு தம் தந்தையின் குறிப்பினைக்கொண்டு வட்டப்பாலை அமைப்புடன் விளக்குகிறார்
சிலம்புக்குழலில் காணப்படும் பன்னிரண்டு தடுப்புகள் பன்னிரண்டு இராசிகளைக் குறிக்கின்றன இவை இசைக்குரிய பன்னிரண்டு தானங்களையும் குறிக்கின்றன இவற்றுள் ஏழு தடுப்புக்களுள் முத்து அல்லது மாணிக்கப்பரல்கள் இடப்பட்டிருப்பது ஏழு நரம்புகளைக் குறிக்கின்றன. ஒரு தடுப்பிற்கும் மற்றொரு தடுப்பிற்குமிடையே இடவெளித்தடுப்பறைகள் இருப்பதால் நாத ஒலி சீராக எழுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.
முத்து அல்லது மாணிக்கப்பரல்களை தடுப்பறைகளில் இடும்போது 1,3,5,7,8,10,12 ம் அறைகளில் இடப்பட்டிருக்கிறது. இவற்றில் முதலாவது அறையில் சிங்கமுகம் பொறிக்கப்பட்டிருக்கும். இது சிலம்பு ஆபரணத்தின் விதியாகும். சிங்கமுகம் பொறித்த தடுப்பை சிம்ம ராசியாக் கொண்டல் ஏனைய பரல்கள் இடப்பட தடுப்பறைகள் முறையே சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம் ஆகிய இராசிகளைக்குறிக்கின்றன.
இந்த எழிசை நரம்புகள் வட்டப்பாலையின் சூத்திரத்தின்படி 4 4 3 2 4 3 2 என்ற இடைவெளி மாத்திரை அமைப்பில் முறையே
முதலாவது தடுப்பறை - சிம்மராசி -தாரம்( நி1 )
மூன்றாவது தடுப்பறை- துலாராசி-குரல் (ஸ)
ஐந்தாவது தடுப்பறை - தனுசுராசி - துத்தம்(ரி2)
ஏழாவது தடுப்பறை - கும்பராசி - கைக்கிளை-(க2)
எட்டாவது தடுப்பறை- மீனராசி -உழை-(ம1)
பத்தாவது தடுப்பறை-இடபராசி-இளி-(ப)
பன்னிரண்டாவது தடுப்பறை-கடகராசி-விளரி(த2)
இந்த அமைப்பில் குரலிலிருந்து நரம்புகளை(சுரத்தானங்களை) வரிசைப்படுத்தினால் கிடைப்பது பாலை யாழ் எனப்படும் ஹரிக்காம்போதி இராகம் ஆகும் .இவ்வாறு சிலம்பு என்ற ஆபரணம் பண்ணை தோற்றுவிக்கும் அமைப்புடன் விளங்கியிருந்தால் ”பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி” என்ற இலக்கியக்குறிப்பை மேற்கோள் காட்டி சிலம்பு ஒரு இசை நூல் என நிறுவுகிறார்.
முனைவர். சிவகௌரி கிரீஷ்குமார்.