ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பண்ணமை சிலம்பு

பண்ணமை  சிலம்பு

பழந்தமிழ் கலை மரபுகளை  உள்ளடக்கிய  பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்.இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்ச்  சிறப்புகளை தன்னகத்தே கொண்டு காலங்களைக்கடந்து தமிழ்க்கலைகளின் பெருமைகளை உணர்த்தி நிற்கிறது.

சிலம்பு கூறும்  தமிழ் இசை மரபினை  பல அறிஞர்கள் ஆய்வு செய்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் அண்ணாமலைப்பல்கலை இசைத்துறை முன்னாள் பேராசிரியர் வீணை வித்துவான்..கலைமாமணி வா.சு.கோமதி சங்கர ஐயர் அவர்களின் சிலம்பு பற்றிய ஆய்வான வட்டப்பாலையின் விளக்கத்தை சிலம்பு என்ற அணிகலனை  ஆதாரமாக கொண்டு விளக்கியுள்ளமையை   ” பண்ணமை சிலம்பு” என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டு இக்கட்டுரையில் ஆய்வு     செய்யப்பட்டுள்ளது..

கலைமாமணி வா.சு.கோமதிசங்கர ஐயர்

கலைமாமணி வா.சு.கோமதிசங்கர ஐயர் அவர்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகாலம் வீணைப்பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் செயல்வீரராகத் திகழ்ந்தவர்.தமிழில் பிரபந்தம் எனும் அரிய உருப்படியை இயற்றியுள்ளார்.

மற்றும் தமிழ் கீதம்,வர்ணம் போன்ற உருப்படியும், திருக்குறளை இயலாகக் கொண்டு 40 திருக்குறள் வர்ணங்களையும் இயற்றியுள்ளார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 21 தமிழிசப்பாடல்கள் கொண்ட தொகுதியில் 11 நூல்களில் பாடல்களை இயற்றியும்,இசையமைத்தும்,மதிப்பீடு செய்தும் பணியாற்றியுள்ளார்.தமிழிசையையே தமது மூச்சாக கொண்டு பல ஆய்வுகளை செய்து ஆய்வுக்கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளியிட்டுளார்.

அத வகையில் சிலப்பதிகாரம் பற்றிய இவருடைய  ஆய்வுகள் மிகச்சிறப்பனவை. “கானல் வரி” என்ற கோமதி சங்கர ஐயரின் நூலில் சிலப்பதிகார இசைச்செய்திகளை   ”நுண்மான் நுழை புலன் அறிவுடன்”   ஆய்வு செய்துள்ளார்.

இந்நூலில் கோமதி சங்கர ஐயரின் ஆய்வு முடிவுகள் யாதெனில்

1. சிலப்பதிகாரம் ஒரு இசை நூல்
2. யாழ்  என்பது தற்போதய வீணை
3.கோவலனும் மாதவிக்கும் இடையே இசை அடிப்படையாலேயே பிரிவு        ஏற்பட்டது
4. சிலம்பு என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பை உணர்த்துகிறது.

இவற்றுள் சிலம்பு என்ற அணிகலன் வட்டப்பாலை அமைப்பை உணர்த்தி நிற்கும் தன்மையை இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.

சிலம்பும் வட்டப்பாலையும்

வட்டப்பாலை

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் பாலைகள்  (தாய்ராகங்கள்) தோன்றும் முறையை விளக்குகின்றார். பாலைகள் என்பது ஏழு நரம்புகள் கொண்ட ஒரு அமைப்பு இப்பாலைகளை பெற நான்கு முறைகள் கூறப்படுகின்றன. அவை ஆயப்பாலை,சதுரப்பாலை,திரிகோணப்பாலை,வட்டப்பாலை. என்பவையாகும். இவற்றுள்  வட்டப்பாலை பற்றிய அடியார்க்கு நல்லாரின் விளக்கம் யாதெனில்
ஒரு  வட்டமானது சாணளவில் வரையப்பட்டு அதில் கிழக்கு,மேற்கு,வடக்கு தெற்கு ஆகிய திசைகளை நான்கு பகுதியாகப்பிரித்து நான்கு கோடுகள் வரைந்து மேலும் ஒவ்வொரு கோணத்திலும் இரு கோடிட்டு 12 பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலிலும் பன்னிரண்டு இராசிகள் நிறுத்துகிறார். இவற்றுள் கிழக்கு பகுதியில் துலா இராசியை நிறுத்தி ஏனைய இராசிகள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. 
இவ்வாறு பிரித்த இராசிகளில் ஏழு நரம்புகளை இடுவதற்கான சூத்திரத்தை கூறுகிறார்.

சொல்லிய கோள் குரல் துத்தம்
துத்தம் தனுவாகும் -மெல்லியல்
கும்பம் கிளையென்றால்- நல்ல
உழையாகும் மீனம் -இளி இடபம்
நண்டு விளரி தாரம் சீயமாம்.

துலா ராசியில் குரல்(ஸ), தனுசு இராசில் துத்தம்(ரி), கும்ப ராசியில் கைக்கிளை(க) மீன இராசியில் உழை(ம) இடப இராசியில் இளி(ப), கடக இராசியில் விளரி(த) சிம்ம இராசியில் தாரம்( நி) ஆகிய நரம்புகளை வைத்து பாலை யாழின் தோற்றத்தை விளக்குகிறார். இந்த பாலை யாழானது தற்போது ஹரிக்காம்போதி என அழைக்கப்படும் இராகமாகும்.

இந்த பாலையாழிலிருந்து குரல் திரிபு மூலம் ஏழ்பெரும் பாலைகள் பிறக்கின்றன  இதை அடியார்க்கு நல்லாரின் சூத்திரத்தை வைத்து பல ஆய்வாளார்கள் ஒவ்வொரு வழிகளை கையாண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஆப்ரஹாம்பண்டிதர், விபுலானந்த அடிகள் ,டாக்டர் எஸ்.இராமநாதன்,டாக்டர்.வி.ப.காமாட்சி சுந்தரம்,ஆகியோர் ஆவர்.
மேற்கண்ட அறிஞர்கள் சிலப்பதிகார செய்யுள்களையும், அடியார்க்கு நல்லாரின் உரை ஆகியவற்றை வைத்து தமது வட்டப்பாலை பற்றிய ஆய்வினை நிகழ்த்திய போது. 
வா.சு கோமதிசங்கர ஐயர் இந்த வட்டப்பாலையை ஆய்வு செய்து புதிய கருத்தொன்றை முன்வைக்கிறார்.

சிலம்பு என்ற ஆபரணத்தின் அமைப்போடு வட்டப்பாலையை தொடர்பு படுத்தி ஆய்வினை மேற்கொள்கிறார்.
சிலம்பு என்ற ஆபரணத்தின் செய்முறையை  நூல்கள் வழி ஆய்வு செய்தும்,அனுபவ வழி அறிந்தும் விளக்குகிறார்’
கோமதி சங்கர ஐயரின் தந்தையார் பல்லவி சுப்பையா பாகவதர் அவர்களின் குருநாதராகிய மாஹாவைத்திய நாத சிவன் அவர்களைப்பற்றிய வாழ்க்கைக்குறிப்பினை எழுதி வைத்துள்ளார். அதில் ”கருணாலயப்பாண்டித்தேவர்” என்னும் ஜமீந்தார் மஹாவைத்தியநாத சிவனுக்கு காற் சிலம்புகளைப் பரிசாக அளிக்கிறார்.அச்சிலம்புகளை மஹாவைத்தியநாத சிவனின் மறைவிற்குப்பிறகு அவரது தந்தையார் வேறு தேவைக்காக அழிக்கும் பொருட்டு உருக்குவதற்காக பிரித்துப்பார்க்குமிடத்தில் அதில் பன்னிரண்டு தடுப்பறைகளையும், அவற்றுள் ஏழு அறைகளில் ஏழு மாணிக்கப்பரல்களையும் கொண்டதாக இருந்துள்ளது இதனை நேரில் பார்த்த பல்லவி சுப்பயா பாகவதர் அதனை குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இவ்வாறு தம் தந்தையின் குறிப்பினைக்கொண்டு வட்டப்பாலை அமைப்புடன் விளக்குகிறார்
சிலம்புக்குழலில் காணப்படும் பன்னிரண்டு தடுப்புகள் பன்னிரண்டு இராசிகளைக் குறிக்கின்றன இவை இசைக்குரிய பன்னிரண்டு தானங்களையும் குறிக்கின்றன  இவற்றுள் ஏழு தடுப்புக்களுள் முத்து அல்லது மாணிக்கப்பரல்கள் இடப்பட்டிருப்பது ஏழு நரம்புகளைக் குறிக்கின்றன. ஒரு தடுப்பிற்கும் மற்றொரு தடுப்பிற்குமிடையே இடவெளித்தடுப்பறைகள் இருப்பதால் நாத ஒலி சீராக எழுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.
முத்து அல்லது மாணிக்கப்பரல்களை தடுப்பறைகளில் இடும்போது 1,3,5,7,8,10,12 ம் அறைகளில் இடப்பட்டிருக்கிறது. இவற்றில் முதலாவது அறையில் சிங்கமுகம் பொறிக்கப்பட்டிருக்கும். இது சிலம்பு ஆபரணத்தின் விதியாகும். சிங்கமுகம் பொறித்த தடுப்பை சிம்ம ராசியாக் கொண்டல் ஏனைய பரல்கள் இடப்பட  தடுப்பறைகள் முறையே சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம் ஆகிய இராசிகளைக்குறிக்கின்றன.
இந்த எழிசை நரம்புகள் வட்டப்பாலையின் சூத்திரத்தின்படி 4 4 3 2 4 3 2 என்ற இடைவெளி மாத்திரை அமைப்பில் முறையே
முதலாவது தடுப்பறை - சிம்மராசி -தாரம்( நி1 )
மூன்றாவது தடுப்பறை- துலாராசி-குரல் (ஸ)
ஐந்தாவது தடுப்பறை - தனுசுராசி - துத்தம்(ரி2)
ஏழாவது தடுப்பறை -  கும்பராசி  - கைக்கிளை-(க2)
எட்டாவது தடுப்பறை- மீனராசி -உழை-(ம1)
பத்தாவது தடுப்பறை-இடபராசி-இளி-(ப)
பன்னிரண்டாவது தடுப்பறை-கடகராசி-விளரி(த2)
இந்த அமைப்பில் குரலிலிருந்து நரம்புகளை(சுரத்தானங்களை) வரிசைப்படுத்தினால் கிடைப்பது பாலை யாழ் எனப்படும் ஹரிக்காம்போதி இராகம் ஆகும் .இவ்வாறு சிலம்பு என்ற ஆபரணம் பண்ணை தோற்றுவிக்கும்  அமைப்புடன் விளங்கியிருந்தால் ”பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி” என்ற இலக்கியக்குறிப்பை மேற்கோள் காட்டி சிலம்பு ஒரு இசை நூல் என நிறுவுகிறார்.
 
முனைவர். சிவகௌரி கிரீஷ்குமார்.

செவ்வாய், 26 ஜூன், 2018

திருக்குறள் தான வர்ணங்கள்


__________________________________________________________________
திருக்குறள் தான வர்ணங்கள்

முன்னுரை :

               வள்ளுவர் வாக்கில் உதித்து உலகப் பொதுமறையாக விளங்கும் நீதி நூல் திருக்குறள்.  மனித குல வாழ்வியலுக்கு வேண்டிய உயர்ந்த கருத்துக்களையெல்லாம் ஈரடிகளில் பதித்து 1330 முத்துக்களாக அலங்கரிக்கப்பட்ட தமிழ்மொழியின் கிரீடம் திருக்குறள்.  இயலாக உள்ள படைப்புகள்  இசையாக வடிவம் பெறும் போது மக்கள் மனதில் கருத்தூன்றி நிலைத்து நிற்கும்.உயர்ந்த  கருத்துக்களை பொருத்தமான இராகங்களில் கேட்கும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

               அந்த வகையில் திருக்குறளை இசையுருவில் பல்வேறு வடிவில் கலைஞர்கள் பாடிவருகின்றனர்.  அவரவர் கற்பனைக்கேற்ப பல இராகங்களில் மெட்டமைக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில் தமிழிசை ஆய்வாளர், வீணை இசைக்கலைஞர் மகாவித்வான் வா.சு.கோமதி சங்கர ஐயர் அவர்கள் திருக்குறளை இயலாகக் கொண்டு தான வர்ணங்களை இயற்றியுள்ளார்.

               வாசுதேவநல்லூரைப் பிறப்பிடமாக கொண்ட மகாவித்வான் கோமதி சங்கர ஐயர் (23.08.1908-7.2.1988) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வீணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.  அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் செயல்வீரராக விளங்கியவர்.  அண்ணாமலைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட 21 தொகுதிகளில் பெரும்பான்மையாக பல தமிழ்ப்பாடல்களுக்கு மெட்டமைத்தும்,இயற்றியும் தொகுத்தும் உள்ளார். தமிழிசை ஆய்வுகள் பல புரிந்துள்ளார்.  தமிழ் மொழி மேல் கொண்ட தீராத காதலால் வள்ளுவன் வாக்கை வர்ணத்தில் பதித்தார். 

               இசை வடிவங்களில் இன்றியமையாதது தான வர்ணம் ஆகும்.  அப்பியாச கானத்திலும், சபா கானத்திலும் வர்ணம் முக்கியமாக இடம் பெறும்.  ஆரம்ப இசைக் கல்வியில் மாணவர்கள் வர்ணத்தைக் கற்றுக்கொள்ளும் பொழுது அதன் இயல் எளிதாக மனதில் நிற்கும்.  இதனைக் கருத்தில் கொண்டு வா.சு. கோமதி சங்கர ஐயர் 46 திருக்குறள் வர்ணங்களை இயற்றியுள்ளார். 

               "தான வர்ணக்கடல்" என்ற தமது சொந்தப் படைப்பான நான்கு தொகுதிகளில் பல வர்ணங்களின் தொகுப்போடு திருக்குறள்                வர்ணங்களையும் இயற்றியுள்ளார்.  பொருளுக்கு ஏற்ற சுவையுடைய இசையுடன் திருக்குறள் இனிதே பொருந்திவருமாறு அமைக்கப்பட்டுள்ளது.  வர்ண்ங்கள் ஆதி தாளத்தில் இயற்றப்பட்டது.  வர்ணத்தின் அங்கங்களான பல்லவியில் ஒரு குறளும், அதே அதிகாரத்தில் இருந்து அனுபல்லவியில் ஒரு குறளுமாக பூர்வாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  சரணம் - வர்ணக்கோட்பாடுகளின் படி ஒரு ஆவர்த்தனமே அமைக்க முடியுமாதலால் பல்லவி அனுபல்லவியில் உள்ள குறள்கள் கூறும் கருத்திற்கு பொருத்தமான கருத்தைக் கொண்ட வரியை கோமதி சங்கர ஐயர் இயலாக அமைத்துள்ளார். 
               "தான வர்ணக்கடல்" என்ற நான்கு தொகுதிகளைக் கொண்ட நூலில் மொத்தம் 43 திருக்குறள் வர்ணங்கள் காணப்படுகின்றன.  இவ் வர்ணங்களுக்காக 86 திருக்குறளைத் தெரிவு செய்துள்ளார்.  பல்லவி அனுபல்லவியில் உள்ள குறள்கள் எதுகை, மோனை பொருந்திவருமாறும் கருத்துக்களில் பொருள் பொதிந்துவருமாறும் இசை அமைத்துள்ளார்.
உதாரணம் :

இராகம் : தோடி                                                   தாளம் : ஆதி

                              பல்லவி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர்  பூசல் தரும் ||   (குறள் : 71)

அனுபல்லவி

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு  || (குறள் : 72)

சரணம்

அன்பின் பெருமை அறிதல் நீர்மை.

நான்கு தொகுதிகளில் உள்ள திருக்குறள் வர்ணங்களின்
விபரங்கள் :

               தான வர்ணக்கடல் தொகுதி - 1 இல் தோடி இராகமும் அதன் ஜன்னிய இராகங்களையும் கொண்டு வர்ணங்கள் மெட்டமைக்கப் பட்டுள்ளன்.  இந் நூலில் 11 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 

தொகுதி -1

1.  அன்பிற்கும் உண்டோ - தோடி
2.  இருந்தோம்பி - தன்யாசி
3.  எழு பிறப்பும் - ஹிந்தோளம்
4.  அறவாழி - அசாவேரி
5.  நன்றி மறப்பது - சுத்த தன்யாசி
6.  செறிவறிந்து - புன்னாகவராளி
7.  வான் நின்று - ரேவகுப்தி
8.  அருளிலார்க்கு - ஜயந்தஸ்ரீ.
9.  சிறப்பு ஈனும் - சுத்த சீமந்தினி
10.  நடுவின்றி - நாகவராளி
11.  புறங்கூறி - கண்டா

தான வர்ணக்கடல் தொகுதி - 2 இல் 13 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 

தொகுதி -2

1.  பயனில் சொற்பாராட்டு - தேனுகா
2.  தன்னுயிரி நீப்பினும் - நாடகப்பிரியா
3.  ஐயத்தின் நீங்கித் - கோகிலப்பிரியா
4.  நெருதல் உளனொருவன் - வகுளாபரணம்
5.  மனைத்தக்க மாண்புடையார் - ஆகிரி
6.  அழுக்காறின் அல்லவை - வசந்த பைரவி
7.  படைக்குடி கூழ் - லலித பஞ்சமம்
8.  கெடுவல் யான் என்பது - மாயாமாளவ கௌளை
9.  அறிவுடையார் - மலஹரி
10.  துறந்தார்க்கும் - சாவேரி
11.  பாத்தூண்மரீ இ- லலிதம்
12.  அகனமர்ந்து - மனோலயம்
13.  வாய்மை எனப்படுவது - ஜகன் மோகனம்              

தான வர்ணக்கடல் தொகுதி - 3 இல் 11 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 

தொகுதி -3

1.  இருமை வகை தெரிந்து - நாட்டை
2.  நுண்ணிய நூல் பல கற்பினும் -கௌளை
3.  சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி - நாதநாமக்கிரியை
4.  அறன் கடை நின்றாருள் எல்லாம் - பூபாளம்
5.  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் - கௌளிபந்து
6.  ஒழுக்கம் உடைமை - கமல மனோஹரி
7.  செவிக்குணவு இல்லாத - மேகரஞ்சனி
8.  வனச என்பர் வையத்தார்க் கெல்லாம் - பரசு
9.  காலம் கருதி இருப்பர் - பாடி
10.  பொறுத்தல் இறப்பினை - சக்கரவாகம்
11.  கடனறிந்து காலம் கருதி - வாஹினி


தான வர்ணக்கடல் தொகுதி - 4 இல் 8 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 


முனைவர்.சிவகௌரி கிரீஷ்குமார்

(தமிழிசை ஆய்வாளர்,
தமிழிசைக் கலைஞர்)
சிதம்பரம்.

சனி, 21 ஏப்ரல், 2018

பண்ணிசைப் பேரறிஞர் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் கௌரவம் அளிக்கப்பட்டது.

பண்ணிசைப் பேரறிஞர் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் கௌரவம் அளிக்கப்பட்டது.🌷🌷🌷
20-4-2018 அன்று யாழ் பல்கலைக்கழக இசைத்துறையில் இடம்பெற்ற பண்ணிசைப் பயிற்ச்சிப்பட்டறையில் கலைமாமணி,திருமுறைக்கலாநிதி,பண்ணிசைப்பேரறிஞர், திருப்பனந்தாள் முத்துக்கந்தசாமி ஓதுவார் ,அவரது மாணவர், திருமுறைக்கலாநிதி வயலூர்,  திரு.பாலச்சந்திரஓதுவார் (தேவார உதவிப்பேராசிரியர் அண்ணாமலைப்பல்கலைக்கழகம்)ஆகியோரின், "பண்ணிசை மரபு" என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறையும்,பண்ணிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.நிகழ்ச்சிக்கு உறுதுணையாக, முனைவர் நா.கிரீஷ்குமார் (உதவிப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) அவர்கள் புல்லாங்குழல், E.P.K.சுப்ரமணியன் (உதவிப்பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் )அவர்கள் மிருதங்கம் இசைத்தனர்.
நிகழ்வில், சங்கீத அக்கடமியால் சமீபத்தில் "பண்ணிசைப் பேரறிஞர்"என்ற  விருது வழங்கப்பட்ட முதல் ஓதுவார் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார். என்பதை  நினைவு கூர்ந்து அவரை பாராட்டும் வகையில் துறைத்தலைவர்,திருமதி கிருபாசக்தி கருணா அவர்கள் பல்கலைக்கழகம் சார்பில் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவித்து மகிழ்ந்தார்கள்.
நிகழ்வில்  இலங்கையின் மூத்த பண்ணிசைக்கலைஞர்களான, திரு.சிவஞானசேகரன் அவர்களும் , யாழ் பல்கலைக்கழக இசைத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் முனைவர் ந.வி.மு.நவரெட்ணம் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி நிகழ்வினை மேலும் சிறப்பித்தார்கள்.  யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர்களும்,மாணவர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட பேராசிரியர்களுக்கு திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். பண்ணிசைக்கென்று  உலகிலேயே இளங்கலைப் பட்டப்படிப்பு(B.F.A) உள்ள ஒரே பல்கலைக்கழகம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகும்.  பண்ணிசைப் பேரறிஞர் விருது பெற்ற முதல் ஓதுவாருக்கு இங்கு  முதலில் கௌரவம் அளித்தமை முக்கிய சிறப்பம்சமாகும்.