அவர்கள் தமிழிசைக்காற்றிய தொண்டினை நினைவுகூர்ந்து போற்றுவோம். 🙏🙏🙏
தம் வாழ்நாள் முழுவதும் தமிழிசைக்கே தொண்டாற்றி மறைந்த கோமதி சங்கர ஐயரின் பணிகளை கிட்டத்தட்ட தமிழிசை உலகம் மறந்தே விட்டது .
இசையை பொறுத்தவரை இரண்டுவகையான பணிகள் உள்ளன செயல்முறை மற்றும் அறிமுறை .
Practical எனப்படும் செயல் முறையில் இசைக்கலைஞர்கள் பாடுவதும் கருவிகளில் வாசிப்பதுமாக கலையினை வளர்த்தவர்கள் அடுத்து .
அறிமுறை (Theory ) என்னும் முறையில் இசை ஆய்வுகள், (இசையியல் இலக்கணம்) அவை தொடர்பான நூல்கள் எழுதுவது போன்ற பணிகளை சில கலைஞர்கள் ஈடுபடுவர். இரண்டு துறையிலுமே சேர்ந்து பணியாற்றிய அறிஞர்கள் மிக குறைவு அந்த வகையில் சிறந்த வீணை இசைக்கலைஞராகவும் அதே நேரம் சிறந்த இசை ஆய்வாளராகவும் அதிலும் குறிப்பாக தமிழிசை ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் கோமதிசங்கர ஐயர் .
இவரது தமிழிசை ஆய்வுகள். படைப்புகள் அனைத்துமே மிகச்சிறந்த கருவூலங்கள் .
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வீணைப்பேராசிரியராக பணியாற்றியவர் அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர் .
இசையை பதிவு செய்ய வசதியில்லாத காலத்தில்
ஏராளமான பழைய தமிழிசைப்பாடல்கள் சுரதாளக்குறிப்புடன் வெளிவரக்காரணமானவர் .
தனது சொந்தப்பதிப்பின் மூலமும் பல தமிழிசைப்பாடல்களுக்கு புத்துயிர் அளித்தவர் .
சிலப்பதிகாரத்தின் துணையோடு இசைத்தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் .
இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட கோமதிசங்கர ஐயரின் பணிகளை இன்று அவர் பிறந்தநாளில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன் .
கலைமாமணி வா.சு.கோமதி சங்கர ஐயர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாசுதேவ நல்லூரில் 23-08-1908 அன்று சுப்பையா பாகவதர் மற்றும் முத்துலெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் தந்தையார் பல்லவி சுப்பையா பாகவதர் சிறந்த இசைக் கலைஞர் ஆவர். இவர் பல்லவி பாடுவதில் வல்லவர். வையச்சேரி மகா. வைத்தியனாத சிவனின் பிரதான சீடர் ஆவார். சிலப்பதிகார நூலினை ஆய்வு செய்து குறிப்புகளாக வைத்திருந்தார். தந்தையின் இசை, இசையியல் ஆர்வமே கோமதி சங்கர ஐயருக்கு தமிழிசை மீது அளவிலாப் பற்றும் ஆர்வமும் உண்டானது.
கோமதி சங்கர ஐயர் தம் தந்தையிடம் ஆரம்ப இசைக் கல்வியையும், காரைக்குடி சகோதரர்களிடம் வீணை இசையையும் கற்றுத் தேர்ந்தார். 1931 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வீணை விரிவுரையாளராக பணியில் சேர்ந்து 1972 வரைப் பணியாற்றி ஒய்வுபெற்றார்.
கோமதி சங்கர ஐயர் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை மறுமலர்ச்சிக்கு பெரும் முயற்சிகளைத் தோற்றுவித்திருந்தார். இதன் விளைவாக தமிழிசை இயக்கம் மலர்ந்திருந்தது.
கோமதிசங்கர ஐயர் இயல்பிலே தமிழிசை மேல் கொண்ட பற்றின் காரணமாகவும் கல்லூரியில் பணிபுரிந்ததாலும் தமிழிசை இயக்கத்திற்கு பல்வேறு வழிகளில் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.
சென்னை அண்ணாமலை மன்றத்தில் வருடந்தோறும் நடைபெற்று வந்த பண்ணாராய்ச்சி கூட்டத்தில் தவறாமல் ஆண்டு தோறும் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரையை வழங்கி வந்தார்.
தமிழிசை இயக்கம் தோன்றிய காலத்தில் அவற்றிற்கு எதிர்ப்புகளும் தோன்றின. பத்திரிகைகளில் எதிர்ப்பு கட்டுரைகளும் வெளிவந்தன அவற்றிற்கெல்லாம் கோமதிசங்கர ஐயர் தகுந்த பதிலும் , தமிழிசை இயக்கத்தின் நோக்கத்தினையும் எழுதியுள்ளார் .
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட 21 தொகுதி இசைத் தமிழ் நூற்களில் 11 நூற்களில் கோமதி சங்கர ஐயர் பெரும் பங்காற்றியுள்ளார். அவற்றில் தமிழ் கீதம், தமிழ் பிரபந்தம், தமிழ் வர்ணங்கள் ஆகியவற்றை இயற்றி வெளியிட்டுள்ளார்.
அரிய இசை உருப்படியான பிரபந்தம் வகையினைத் தமிழில் சுவர தாள முறையில் முதலில் வெளியிட்டவர் கோமதி சங்கர ஐயர் ஆவர். நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம் ஆகிய கன ராகங்களில் இவர் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டாம் தொகுதியில் வெளிவந்துள்ளன.
நீலகண்ட சிவன். டி. இலக்குமண பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதியார், சுத்தானந்த பாரதியார், அச்சுத தாசர், வேத நாயகம் பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், வையச்சேரி இராமசாமி சிவன் ஆகிய தமிழிசைப் புலவர்களின் அரிய பாடல்களை தொகுத்து சுவர தாளக் குறிப்புடன் இசைத் தமிழ் தொகுதிகளில் வெளிவரச் செய்தார்.
பல தமிழிசைப் பாடல்களைத் தேடித் தொகுத்து அவற்றின் உண்மை மெட்டினைக் களப்பணி செய்து கண்டறிந்தும், சுவர தாளக் குறிப்பு எழுதியும், மதிப்பாய்வு செய்தும், தாமே பல புதிய பாடல்களை இயற்றியும் தந்துள்ளார்.
கோமதி சங்கர ஐயரால் இசை வகுக்கப்பட்ட முதன்மை வாக்கேயக்காரர்களின் பாடல்களின் சொந்த மெட்டுக்களை மிகுந்த தேடல்களின் மூலமும் அவர்களின் நேரடி சீடர்களிடமும் கற்றுக்கொண்டு இசை அமைத்துள்ளார். இதன் மூலம் எழுதியவரின் சொந்த மெட்டையே இசை உலகிற்கு கொடுத்த பெருமை கோமதி சங்கர ஐயருக்கு உரித்தாகிறது. அவ்வாறு மூல இசை கிடைக்கப்பெறாத பாடல்களின் மெட்டுக்களை தாமே முயன்று திறம் பட அமைத்துள்ளார்.
கோமதி சங்கர ஐயர்
பல்கலைக்கழக பணி மட்டுமல்லாது தமது சொந்தப் படைப்புகளாக தமிழிசை வடிவங்களும் (வர்ணங்களும்) இசை இலக்கண- இயல் நூற்களும் வெளியிட்டுள்ளார்.
#திருக்குறள் வர்ணங்கள்
கோமதி சங்கர ஐயர் வெளியிட்ட தான வர்ணக்கடல் பாகம்.1,2,3,4 ஆகிய நூற்களில் தாம் இயற்றிய மற்றும் பிற வாக்கேயகாரர்கள் இயற்றிய வர்ணங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவற்றுள் 43 திருக்குறள் வர்ணங்கள் இவரால் இசை அமைக்கப்பட்டது என்பது முக்கியமான குறிப்பாகும்.
#தமிழிசை ஆய்வு நூல்கள் :
#யாழ்முரிப்பண் :
இவர் 1977 ஆம் ஆண்டு UGC ஆல் பரிந்துரைக்கப்பட்டு “ யாழ் முரிப்பண்” என்ற இசை இலக்கண ஆய்வு நூலினை வெளியிட்டார். திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய “மாதர் மடப்பிடியும்” என்ற பதிகத்திற்கான பண் யாழ் மூரி ஆகும். அப் பண் ”அடாணா” இராகம் என்பதை தொன்மையான தமிழிசை இலக்கண முறையில் நிறுவியுள்ளார். பண்களின் தற்கால பெயர்களை இலக்கணத்துடன் அறியும் முறையினை இந்நூலில் விளக்கியுள்ளார்.
மேலும்
பண்கள் பற்றிய ஆய்வுகளுக்கு ஆயிரம் வருடபரம்பரையாக மரபு வழி மாறாமல் தமிழிசை பாடி வரும் #ஓதுவார்களின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளார் . அவர்கள் துணையுடனே இந்தளம் போன்ற பல பண்களுக்கு தமிழிசை மரபில் தற்கால இராகங்களை கண்டறிந்துள்ளார்.
#கானல்வரி
1991- ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டது. சிலப்பதிகாரத்து இசைச் செய்திகள் இந்த நூலில் உள்ளது.
கோவலன் மாதவி பிரிவதற்கான காரணத்தை இசையியல் முறையோடு விளக்கியுள்ளார்.
மேலும் இந்நூலில் சிலம்பு ஒரு இசை நூல் என பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். சிலம்பு என்ற அணிகலன் #வட்டப்பாலை அமைப்பில் உள்ளதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
’யாழ்’ என்பது தற்கால வழக்கிலிருக்கும் வீணை என்பதை வலியுறுத்துகிறார். மகர யாழ் என்பது மத்திம சுருதியை ஆதரமாகக்(முதல் தந்தி ஸ விற்கு பதிலாக ம சுரத்தில் சுருதி சேர்க்கப்பட்டது ) கொண்ட வீணை என விளக்குகிறார். , யாழ் என்பது வேறு கருவியும் அல்ல இடையில் மறையவும் இல்லை என்பதையும் வலியுறுத்தி தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
”#இசைத்தமிழ் இலக்கணவிளக்கம்” என்னும் இந்நூல் மதுரைக் காமரசர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இசைக்கு முக்கியமான நூலாக வடமொழி மரபில் வழங்கி வரும் சங்கீத ரத்னாகரம் என்னும் நூல் சிலப்பதிகாரத்தின் வழிவந்த நூல் என்பதை விளக்கியுள்ளார். கோமதி சங்கர ஐயர் வடமொழி, கிரந்தம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஆதலால் சங்கீத ரத்னாகரத்தையும் சிலப்பதிகாரத்தையும் நன்கு ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் இசைக்கு இலக்கணம் வகுத்து அவற்றின் விளக்கங்களோடு
இசைத் தமிழ் இலக்கண நூல் எழுதியுள்ளார். மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில் தேர்வு மாதிரி வினாக்களையும் தொகுத்துள்ளார். தமிழிசைக் கலைச் சொற்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளார்.
#இசைவரலாற்று ஆய்வு நூல்கள்
”இசையுலகில் மகா வைத்தியாநாத சிவன் பாகம் 1, 2 “ ஆகிய நூற்களை முறையே 1970, 1971 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டுள்ளார். மகாவைத்தியநாத சிவனின் வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தும் அவர் பாடிய தமிழ் பல்லவிகள் மற்றும் உருப்படிகள் சிலவற்றை சுவர தாளக் குறிப்புடன் எழுதியுள்ளார்.
”#இசைக்கலைவல்லுனர்கள்’ என்னும் நூலில் பல்வேறு இசைக்கலைஞர்களின் வாழ்க்கையும் அவர் தம் இசைத் தொண்டினையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் இசைப்படைப்புகளையும் சுவர தாள முறையுடன் கொடுத்துள்ளார்.
கோமதி சங்கர ஐயரின்
வெளிவராத படைப்புகள்
தானவர்ணக்கடல் ஏழு தொகுதிகள் (420 வர்ணங்கள் அடங்கியது), ஸ்வரஜதிகள் (50), மூவர் தேவாரம் என்ற தலைப்பில் தேவாரப் பாடல்கள் அவற்றின் பண்களோடு ஸ்வரதாளக் குறிப்புடன் எழுதியுள்ளார். துரைசாமிக் கவிராயர் (இரண்டு தொகுதிகள்), இராமசாமி சிவன் விடுதிக் கீர்த்தனைகள், ஆனை ஐயாவின் பாடல்கள், நீலகண்ட சிவன் பாடல்கள் – 2 தொகுதிகள், அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள், வெவ்வேறு வாக்கேயக் காரர்களின் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், இராமலிங்க வள்ளலார் பாடல்கள் சுவர தாளக் குறிப்புகள், 103 பண்கள் ஒரு திறனாய்வு, சிலம்பு காட்டும் பண்டைத் தமிழிசை, இசை உலகில் மகா வைத்திய நாத சிவன் பாகம் 3, இசைவானில் பல்லவி சுப்பையா பாகவதர், பெரிய புராணப் பாடல்களுக்கு (கீர்த்தனைகள்-சுவர தாளக் குறிப்பு)
ஆகியவை இன்னும் வெளிவராமல் உள்ள படைப்புகள் ஆகும் .
இவை வெளிவந்தால் இன்னும் ஏராளமான தமிழிசைப்பாடல்கள் கிடைக்கும் .
சுத்தானந்த பாரதியாரிடம் நெருங்கிய நட்பு பூண்டிருந்த கோமதி சங்கரஐயர் அவரது அற்புதமான பல கீர்த்தனைகளுக்கு தாமே இசையமைத்து சுரதாளக்குறிப்புடன் வெளிவருவதற்கு காரணமாக இருந்தார் .
சுத்தானந்த பாரதியார்
மாணிக்கவாசகரின் அருள்வரலாற்றினை இயல் இசை நாடகமாக தொகுத்து
மாணிக்கப்பாட்டு என்ற அற்புதமாக நூலை படைத்துள்ளார் அதிலுள்ள கீர்த்தனைகளுக்கும் திருவாசகப்பாடல்களுக்கும் கோமதி சங்கர ஐயர் தாமே மெட்டமைத்து சுரதாளக்குறிப்பும் எழுதியுள்ளார் .
கோமதி சங்கர ஐயர், அகில இந்திய வானொலியில் முதல் தர (A Grade)வீணைக் கலைஞராகவும் இசைப்பங்காற்றியுள்ளார் .
#முக்கிய சீடர்கள்
இவர் ஏராளமான சீடர்களையும் உருவாக்கியுள்ளார். அவர்களில் முனைவர். எஸ். இராமனாதன் , சங்கீத கலாநிதி கே.பி.. சிவானந்தம், வீணை. பிச்சுமணி ஐயர், போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் .
கோமதி சங்கர ஐயரின் புதல்வர்களான வா.கோ.சுப்பிரமணியன்
தெய்வத்திரு வா.கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் தந்தையின் பணிகளை தொடர்ந்த வர்கள் .கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தந்தையைப் போன்று பல தமிழிசை ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்
வா.கோ.சுப்பிரமணியன் அவர்கள் தந்தையை போன்ற சிறந்த வீணையிசைக்கலைஞர் அத்துடன் இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியவர் . அதன்பின் அண்ணாமலைப்பல்கலைக்கழக இசைத்துறைத்துறையின் புல முதல்வராக பணியாற்றியுள்ளார் .
தற்போது பல இசை ஆய்வுநூல்களை எழுதி இணையம் வழியாக வெளியிட்டு வருகிறார் .
அகில இந்திய வானொலியில் முதல் தர (A Grade)வீணைக் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்
தமிழிசை வளர்ச்சிக்கு அடிப்படையான இசை இலக்கண நூற்கள், செயல் முறை நூற்கள், ஆய்வுக்கட்டுரைகள் பல படைத்த கோமதி சங்கர ஐயர் 07-02-1988 அன்று தமது 80 வது வயதில் இறைவனடி அடைந்தார். அவர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவரது படைப்புகள் இன்றும் தமிழிசை உலகில் வாழ்ந்து வருகிறது .
இவரது தமிழிசைத் தொண்டினை எதிர்காலத்தலைமுறையினர் அறிய ஏதுவாக இசைக்கல்லூரிகளில் பாடத்திட்டத்திட்டங்களில் இடம்பெற வேண்டுமென
உரியவர்களை வேண்டிக்கொள்கிறேன்
முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக