வெள்ளி, 15 செப்டம்பர், 2017

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தடிகளின் வரலாற்று ஆவணப்படம்.



பேராசிரியர் முனைவர் .மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு இணையம் மூலம்   ஆற்றும் பெரும் பணியை உலகம்  நன்கு அறியும்.  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனாரின்  வாழ்வையும் இசைப்பணிகளையும்   தொகுத்து   மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆவணப்படமாக வெளியிட்டு இசைத்தமிழ் உலகிற்கு பெரும்தொண்டாற்றியவர்.  அதனைத்தொடர்ந்து  இலங்கையில் பிறந்த  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர்களின் இசைத்தொண்டினையும்  தம் ஆராய்ச்சித்திறமையாலும்  கடும் உழைப்பாலும்  தொகுத்து ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். ஐம்பது நிமிடம் ஓடத்தக்க வகையில்  உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை உருவாக்க இவர்கள் பட்ட பாட்டினை ஓரளவு நான் அறிவேன்.

முனைவர் இளங்கோவன் அவர்கள் அடிகளாரின் ஆவணப்படம் தயாரிப்பதற்கு தகவல்கள் திரட்டும் பணியை  தொடங்கியதிலிருந்து ஆவலுடன் அவதானித்து வந்தேன். சென்றமாதம்  ஐயா  அவர்களின் புதுச்சேரி  இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன்.  ஐயாவின் குடும்பத்தினர் எம்மை வரவேற்று அன்புடன்    உபசரித்தனர். ஐயா அவர்கள் தாம் தயாரித்த சுவாமி விபுலானந்தரின் ஆவணப்படத்தினை திரையிட்டுக் காட்டினார்.

காட்சிகள் ஒவ்வொன்றும் என் மனத்திரையில் நீங்கா இடம் பிடித்து விட்டன.அடிகளாரை நேரில் கண்டதுபோன்ற உணர்வெழ உள்ளம் உருகி விழிகளில் நீர்த்திரையிட்டன. காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள அடிகளாரின் உருவச்சிலை அற்புதமாக உயிரோட்டத்துடன் மிளிர்கிறது.
ராஜ்குமாரின் பின்னணி இசை படத்திற்கு மேலும்மெருகூட்டியுள்ளது.

விபுலாநந்த அடிகளாரைப்பற்றி உலகம் அறியாத பல புதிய செய்திகளை ஆவணப்படத்தில் காண முடிந்தது . சுவாமிகள் பிறந்த இடத்திலிருந்து, அவர் கல்வி கற்ற,பணியாற்றிய ,யாழ் நூல் இயற்றிய,  அரங்கேற்றிய   இடம் வரை நேரில்   சென்று ஒளிப்பதிவு செய்து தொகுத்துள்ளார்.அடிகளார் பணியாற்றிய பாடசாலைகள் கல்லூரிகள் ஆகியவற்றை ஒன்று விடாது  இலங்கையிலும்  தமிழ் நாட்டிலும்  பதிவுசெய்துள்ளார்.

அடிகளாரின் துறவு வாழ்வினை விளக்கும் வண்ணம் இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் உரை சிறப்பாக அமைந்துள்ளது.
விபுலானந்த அடிகளின் சமகாலத்து அறிஞர்கள்,   உறவினர்கள்,மாணவர்கள், அவரை ஆதரித்தவர்கள், என அவர்கள் இல்லங்களுக்கு தேடிச்சென்று அவர்களது அனுபவங்களையும்.   அவர்களுக்கு  சுவாமிகள் எழுதிய அரிய கடிதங்களையும்ஆவணப்படத்தில்  காட்டியுள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும்.

அடிகளாரின் மாணவரான க.வெள்ளைவாரணனாரின் புதல்வியைச் சிதம்பரத்தில் அவர் இல்லத்தில் சந்தித்து  நேர்காணல் செய்துள்ளமை பாராட்டத்தகுந்த பணியாகும். விபுலாநந்த அடிகளார்   வெள்ளைவாரணனா ருக்கு எழுதிய அரிய கடிதங்களை  குடும்பத்தாரிடமிருந்து பெற்று வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளமைக்குத் தமிழுலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது
ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன். அவர்கள் படப்பிடிப்பிற்கும் ஆய்விற்குமாக   இலங்கை செல்லும் பொழுது, என் பிறந்தகமான திருகோணமலையில் விபுலாநந்த அடிகள் அதிபராக பணியாற்றிய  இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்குச் செல்வதாக கூறினார். திருகோணமலையில் அதே பாடசாலையில் பணியாற்றிய ஈழத்து காந்தி என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட காந்திமாஸ்டர் ஐயா இருக்கிறார்  எனவும், அவர் நூறு வயதினை  நெருங்கிக்கொண்டிருக்கிறார் எனவும்,  அ டிகளாரைப்பற்றி  விவரம் ஏதேனும் தெரிந்திருக்கும் எனவும், கூறினேன்.   எனவே  காந்தி மாஸ்டரை  அவசியம் பார்த்து வாருங்கள் என்று  கூறினேன்.
மு. இளங்கோவன்   அவர்கள் காந்தி மாஸ்டரைச் சந்தித்து  பல விபரங்களைப் பதிவு செய்துள்ளதை அறிந்து  வியப்படைந்தேன்.  அவர், விபுலாநந்த அடிகள் திருகோணமலை இந்துக்கல்லூரியில்அதிபராகப்  பணியாற்றிய போது காந்தி மாஸ்டர் அப்பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்ற செய்தியை  மு.இளங்கோவன்  என்னிடம் தெரிவித்த பொழுது    எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது காரணம்  காந்திமாஸ்டரின் பக்கத்துவீட்டில் தான் நான் பிறந்து வளர்ந்தேன் .   காந்தி மாஸ்டரை பல  நாள்கண்டிருந்தும் பக்கத்தில் வாழ்ந்திருந்தும் .  இவர் அடிகளாருடன் பணியாற்றிய அரிய  செய்தி இளங்கோவன் அவர்களின்   ஆய்வின் மூலமாகத்தான் எனக்கும்  உலகத்திற்கும் தெரிய வந்தது.

  இளங்கோவன் ஐயா காந்திமாஸ்டரை சந்தித்து அடிகளாருடனான அவரது அனுபவத்தை பதிவு செய்து வந்த சில மாதங்களில் காந்தி மாஸ்டர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அடிகளாரின் ஆவணப்படத்தில் காந்தி மாஸ்டரின் அனுபவப்பகிர்வு எம் திருகோணமலை மக்களுக்கு அரிய கருவூலமாகவிளங்கும்.

விபுலாநந்த அடிகள் பிறந்த ஊர்,படித்த பள்ளிகள் வளர்ந்த இடங்கள் யாவும் முறைப்பட ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளன தக்க அறிஞர்களின் கருத்துரைகள் படத்திற்கு மேலும் சிறப்பைக்கொடுக்கின்றன

வெள்ளை நிற மல்லிகையோ என்ற அடிகளாரின் பிரபலமான பாடலைச்
சாருகேசி இராகத்தில் தொடங்கி இராகமாலிகையாக இசையமைத்து திரு.ராஜ்குமார் அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார்.அதற்கான நடனக்காட்சிகளும் கோயில் பின்புலத்தில்  சிறப்பாக அமைந்துள்ளன.இந்தப்பாடல் இலங்கைத்தமிழ் மக்கள் எதிர்காலத்தில் கொண்டாடத்தகுந்த பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

திறமையாளர்களின் படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் இலங்கை இந்துக் கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் திரு.உமாமகேஸ்வரன் ஐயா அவர்கள் ,மு.இளங்கோவன் அவர்கள் உருவாக்கிய சுவாமி விபுலாநந்தரின் ஆவணப்படத்தினை  அமைச்சகம் மூலம்  இலங்கையில் பலரும் பார்ப்பதற்கு வழி செய்துள்ளதை அறிந்து  நன்றியுடன் அவரை வணங்கிப்பாராட்டுகின்றேன்.

இவ் ஆவணப்படத்தினை உருவாக்க மு. இளங்கோவன் ஐயா கடுமையாக உழைத்துள்ளார்  தமது சொந்த செலவிலேயே படத்தை தயாரித்திருப்பது அடிகளார் மேல் அவர் கொண்டுள்ள பெருமதிப்பைக்  காட்டுகிறது. ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளுக்கு  அவர்தம் குடும்பத்தினரின் பங்களிப்பு அளப்பரியது. கனடாவில் வாழும்  திரு.சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் இந்தப்படம் உருவாவதற்குப் பலவகையில் துணைநின்றுள்ளதை  அறிந்து அவரையும்பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

மு.இளங்கோவன் அவர்கள்  விடுமுறை நாட்களில் கூட தம் குடும்பத்தினருடன் இருப்பது குறைவு. ஓராண்டு உழைப்பையும் அவர் ஊதியத்தையும் உள்வாங்கிக் கொண்ட  விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உலகம் முழுதும் திரையிட்டுப்பார்க்கும் தரத்தில் உள்ளது. புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டுவதன் வழியாகத் தாயகச் சிறப்பினை நினைவூட்டலாம்.

 சிறந்தமுறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படைப்பினை தமிழ் ஆர்வலர்களும் மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டும்.

16.09.2017 அன்று புதுச்சேரியில்  திருமதி சௌமியா அன்புமனி அவர்களால் தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில்   இவ் ஆவணப்படம் வெளியிடப்படவும்  திரையிடப்படவும்  உள்ளது.  (அழைப்பிதழ் விபரம் இணைக்கப்பட்டுள்ளது) வாய்ப்புக்  கிடைக்கும் தமிழ் ஆர்வலர்கள் அவசியம் கண்டு மகிழுங்கள். மு.இளங்கோவனை வாழ்த்தி, மேலும் பணிகள் சிறக்க ஊக்கப்படுத்துங்கள்.

மு.இளங்கோவன் ஐயாவின் இம் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன்.   இன்னும் பல இசைத்தமிழ் அறிஞர்களின் இசைத்தொண்டுகளை ஆவணப்படமாக   தயாரிக்க வேண்டும் என மு. இளங்கோவன் ஐயா அவர்களைத்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 நன்றிகளுடன்
முனைவர்.சிவகௌரி கிரீஷ்குமார்




செவ்வாய், 11 ஜூலை, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் குழலிசை மற்றும் பண்ணிசை நிகழ்வு.





உலகிலேயே பண்ணிசைக்கு இளங்கலைப்பட்டப்படிப்பு (Bachelor of Arts) உள்ள ஒரே பல்கைக்கழகம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் ஆகும்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் (இராமனாதன் நுண்கலைப்பீட்ம்) 02/06/2017 அன்று பேராசிரியப்பெருமக்களுடனும் மாணவச்செல்வங்களுடனும் பண்ணிசையின் சிறப்பையும் அதன் தொன்மையும்.பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு இறையருளால் கிடைத்தது..பண்ணிசை என்னும் தமிழிசையே கர்நாடக இசையின் முன்னோடி என்ற கருத்தினை விளக்கி, அதற்கு ஆதாரமாக தமிழிசையின் முதல் வடிவமாகஆறாம் நூற்றாண்டில் தோன்றிய, தேவாரங்களில் காணப்படும் சிறப்பு இசைக்கூறுகளை விளக்கி,மாணவர்களுக்கு பண்ணிசையை போற்றிப் பாதுகாக்க  வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி,பண்ணிசை நிகழ்வு ஒன்றினையும் குழலிசையின் துணையுடன் நிகழ்த்தினோம்
  இந் நிகழ்ச்சிக்கு முன்னதாக இனிய குழலிசை நிகழ்வினை முனைவர் கிரீஷ்குமார் அவர்கள் வழங்கினார்கள்.



இந்நிகழ்வினை  ஏற்பாடு செய்து,தலைமையேற்று நடாத்தி, எம்மை அவர்தம் இல்லத்தில் அன்போடு உபசரித்த என் ஆருயிர்த்தோழியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறைத்தலைவியுமான திருமதி கிருபாசக்தி கருணா அவர்களுக்கும்,அவரது அன்பான குடும்பத்தினர்க்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு உறுதுணையாக வயலின் இசைத்த அத்துறை விரிவுரையாளர்கள் திருமதி ஜனனி,திருமதி சுஜாதா நிரஞ்சன்,அவர்களுக்கும், மிருதங்கம் இசைத்த அத்துறை பேராசிரியர் திரு கன்ணதாசன் அவர்களுக்கும் எமது நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துஎம்மை  வாழ்த்திய முன்னாள் இசைத்துறைத்தலைவர் முனைவர் நா. வி.மு. நவரெட்ணம் ஐயா அவர்களுக்கும்,இலங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திரு.பொன்.வாமதேவன் ஐயா அவர்களுக்கும் நன்றிகலந்த வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்.
 நிகழ்வினை கண்டு களித்த இசைத்துறைப்பேராசியர்களுக்கும், நடனத்துறைப்பேராசியர்களுக்கும். மாணவச்செல்வங்களுக்கும் எம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பண்ணிசை பயிற்றுவித்த  என் குருநாதர் குமாரவயலூர் பாலச்சந்திர ஓதுவார் ஐயா அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாலக்காடு சுவாதி சங்கீத சபாவில் இசை நிகழ்வு

02.07.2017 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாநகரில்,    திரு.வெங்கட்ராமன்(சித்தப்பா) திருமதி விஜயாம்பிகா வெங்கட்ராமன்(சித்தி) அவர்களின் பேரனும்,என் கணவரின் சகோதர் திரு கணேஷ் திருமதி சங்கீதா அவர்களின் புதல்வனுமாகிய  செல்வன்  ”வருண் கணேஷ்” அவர்களின்  உபநயனம்  என்னும் மங்கள நிகழ்ச்சிக்கு மகுடம் சேர்த்தால் போல்,
புகழ் பெற்ற  கர்நாடக இசைக்கலைஞர் மறைந்த அம்பலப்புழை திருமதி அன்னபூரணி அம்மாள் அவர்களின் சகோதரரும்  எங்கள் குடும்பத்தின் மூத்த இசைக்கலைஞரும்,எனது   கணவரின்
 பாட்டனாரும்(மாமா தாத்தா)  எனது   கணவரின்
முதல் குழலிசை குருவுமான 
அம்பலப்புழை, பேராசிரியர் ஹரிஹர   ஐயர் அவர்களுக்கு பாலக்காடு சுவாதி சங்கீதசபையால்,
” நாத சந்திரிகை” எனும் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது
.அதன் பின்னர் இரு குழலிசையும்,அதை தொடர்ந்த்து குழலுடன் இணைந்த தமிழிசையும் இடம்பெற்றது.இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து எம்மை ஊக்குவித்த பாலக்காடு திரு.வெங்கட்ராமன்(சித்தப்பா) திருமதி விஜயாம்பிகா வெங்கட்ராமன்(சித்தி) அவர்கள் குடும்பத்தார்க்கும்,பாலக்காடு சுவாதி சங்கீத சபையினர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 
இசையரங்கிற்கு உறுதுணையாக வாசித்த பக்க வாத்தியக்கலைஞர்களுக்கும், அன்பு உறவுப் பெருமக்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் எமது அன்பு கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் 
















கொல்லம் அருள்மிகு மஹா கணபதி கோவிலில் இசை நிகழ்வு.

கேரள மாநிலம் கொல்லம் மாநகரிலமைந்துள்ள, கொட்டாரக்குளம் அருள்மிகு மஹாகணபதி கோவிலின் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு 1.7.2017 அன்று இடம்பெற்ற  இசை நிகழ்வில் எங்கள் குடும்பத்தின் மூத்த இசைக்கலைஞரும்,எனது துணைவரின்பாட்டனாரும் முதல்குழல் குருவுமான அம்பலப்புழை, பேராசிரியர் ஹரிஹர   ஐயர் அவர்களினதும், முனைவர் கிரீஷ்குமார் அவர்களினதும்,  குழல்கள் இசையுடன்  எனது குரலிசையும் இடம்பெற்றது.இந் நிகழ்வினை ஏற்பாடு செய்து, எம்மை ஊக்குவித்த திரு S.R.S.மணி (சித்தப்பா) திருமதி ராதிகா(சித்தி) அவர்கள் குடும்பத்தார்க்கும்,அவ்வாலய நிர்வாகத்தினர்க்கும்,இசை நிகழ்ச்சியை பரிமளிக்கச்செய்த பக்க வாத்தியக்கலைஞர்களுக்கும், நிகழ்வினை ரசித்து பாராட்டிய  இசை ரசிகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


வியாழன், 9 பிப்ரவரி, 2017

திருத்தருமபுர ஆலய குடமுழுக்கு விழாவில் தருமையாதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின்திருக்கரங்களால், குமாரவயலூர் பாலச்சந்திர ஓதுவார் அவர்களுக்கு “திருமுறைக்கலாநிதி”என்ற பட்டமும், பொற்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது


இன்றைய தினம் (09.02.2017) திருக்குட நன்னீராட்டு விழா கண்ட  திருத்தருமபுரப்பதியில்,திருஞான சம்பந்தப்பெருமான் தமது  அளப்பெரிய இசை ஆற்றலால் திரு அற்புதம் நிகழ்த்திய தலமாகும்.. யாழில் இட்டு வாசிக்கமுடியாதவாறு யாழ்முரிப்பண்ணில் அமைந்த “மாதர் மடப்பிடியும்”என்ற பதிகத்தை திருவாய் மலர்ந்தருளினார்.இப்பண் இசை நுணுக்கங்கள் செறிந்து மிக அற்புதம் வாய்ந்ததாக காணப்படுகிறது.இந்நிகழ்வு ஆதி இசையாகிய தமிழிசை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.இதனை நுண்மான் நுழைபுலன் இசையறிவுடனேயே உணரமுடியும்.பல இசை ஆய்வாளர்கள் இப்பண்ணினை ஆய்வு செய்துள்ளனர்.(வா.சு.கோமதிசங்கர ஐயர் என்ற தமிழிசை ஆய்வாளர் ”யாழ்முரிப்பண் ”என்ற தமது நூலில் சம்பந்தப்பெருமான் அருளிய அற்புதத்தையும் இசைச்சிறப்பையும் மிகச்சிறப்பாக ஆய்வு செய்துள்ளார்.)



பண்ணிசையை பல நூற்றாண்டு காலமாக போற்றிப்பாதுகாத்துவரும் தருமபுர அதீனத்தின் பணி ஈடு இணையற்றது.தமிழிசைக்காவலர்களாகிய ஓதுவாமூர்த்திகளில் இன்று பெரும்பான்மையானவர்கள் தருமபுர மடத்து தேவாரப்பாடசாலையில்  பயின்றவர்களும் அவர்கள் வழிவந்தவர்களும் ஆவர். .திருமடத்தின் பண்ணிசைப்பணிகளில் ஒன்றாகிய ஓதுவாமூர்த்திகளை ஊக்குவிக்கும் முகமாக ”திருமுறைக்கலாநிதி என்ற பட்டம் வழங்கப்படுகிறது
. இது ஆண்டுதோறும்சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறும் ஞானப்பால் உற்சவத்திலும் .திருவாமூரில் திருநாவுக்கரசு நாயனார் ஆலயத்தில் அப்பர் குருபூசைத்தினத்திலும். மடத்தின் சில  முக்கிய நிகழ்வுகளின் போதும், ஆதீனத்திருக்கோயில்களின் குடமுழுக்கு விழாவின் போதும் வழங்கப்படுகிறது.

இன்றுதிருத்தருமபுரத் தலத்திலே திருக்குடநன்னீராட்டுவிழாவில்,
 , தருமையாதீன இருபத்தி ஆறாவது குருமாகா  சந்நிதானம்   ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். திருக்கரங்களால்,குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவாருக்கு ”திருமுறைக்கலாநிதி” என்ற பட்டமும்,பொற்பதக்கமும் வழங்கியருளினார்கள்..இவ்வாலயத்தில் பாலச்சந்திர ஓதுவாமூர்த்திகளுக்கு இவ்விருது கிடைத்தமை மிகப்பொருத்தமானதாகும். இவர்கள் பண்ணிசையிலும் தாளநுணுக்கங்களிலும் கைதேர்ந்தவர்.தமது பல பண்ணிசை அரங்கினிலே ’மாதர் மடப்பிடியும்” என்ற இத்தலத்து பதிகத்தினை மிகச்சிறப்பாக இசைநுணுக்கங்களுடன் பாடியுள்ளார்.. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தேவாரப்பேராசிரியராக பணியாற்றிவரும் இவர்.தருமபுரமடத்திலும் பண்ணிசைப்பணியாற்றி வருகின்றார்.

 மூன்று தலைமுறையாக தருமையாதீன இருபத்தியாறாவது குருமாகா  சந்நிதானம் அவர்களிடம் “திருமுறைக்கலாநிதி” என்ற பட்டம் பெற்ற பெருமைக்குரிய ஒரே ஓதுவார் குடும்பம்.

இவரது பாட்டனார்.தேவூர்  சந்திரகாச தேசிகர் அவர்களுக்கு 1999 ம் ஆண்டில் சீர்காழி பிரமபுரீஸ்வரர் ஆலயத்தில் திருமுலைப்பால் உற்சவத்தின் போதும்,
இவரதுதந்தையார்   குமாரவயலூர் திருஞானசம்பந்த ஓதுவார் அவர்களுக்கு, 2004ம் ஆண்டு தருமையாதீனம் 26 வது ஸ்ரீலஸ்ரீ சந்நிதானம் அவர்களின் 80ம் ஆண்டு முத்து விழாவின் போதும்,  குமாரவயலூர் பாலச்சந்திர
 ஓதுவாருக்கு திருத்தருமபுர ஆலய திருக்குட நன்னீராட்டுவிழாவிலும்  தருமையாதீன இருபத்தியாறாவது குருமாகா  சந்நிதானம் அவர்களின்“திருக்கரங்களால்
திருமுறைக்கலாநிதி” என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும்,பொன்னாடையும் அணிவித்து ஆசிவழங்கினார்கள்.