செவ்வாய், 26 ஜூன், 2018

திருக்குறள் தான வர்ணங்கள்


__________________________________________________________________
திருக்குறள் தான வர்ணங்கள்

முன்னுரை :

               வள்ளுவர் வாக்கில் உதித்து உலகப் பொதுமறையாக விளங்கும் நீதி நூல் திருக்குறள்.  மனித குல வாழ்வியலுக்கு வேண்டிய உயர்ந்த கருத்துக்களையெல்லாம் ஈரடிகளில் பதித்து 1330 முத்துக்களாக அலங்கரிக்கப்பட்ட தமிழ்மொழியின் கிரீடம் திருக்குறள்.  இயலாக உள்ள படைப்புகள்  இசையாக வடிவம் பெறும் போது மக்கள் மனதில் கருத்தூன்றி நிலைத்து நிற்கும்.உயர்ந்த  கருத்துக்களை பொருத்தமான இராகங்களில் கேட்கும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

               அந்த வகையில் திருக்குறளை இசையுருவில் பல்வேறு வடிவில் கலைஞர்கள் பாடிவருகின்றனர்.  அவரவர் கற்பனைக்கேற்ப பல இராகங்களில் மெட்டமைக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில் தமிழிசை ஆய்வாளர், வீணை இசைக்கலைஞர் மகாவித்வான் வா.சு.கோமதி சங்கர ஐயர் அவர்கள் திருக்குறளை இயலாகக் கொண்டு தான வர்ணங்களை இயற்றியுள்ளார்.

               வாசுதேவநல்லூரைப் பிறப்பிடமாக கொண்ட மகாவித்வான் கோமதி சங்கர ஐயர் (23.08.1908-7.2.1988) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வீணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.  அண்ணாமலைச்செட்டியாரின் தமிழிசை இயக்கத்தின் செயல்வீரராக விளங்கியவர்.  அண்ணாமலைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட 21 தொகுதிகளில் பெரும்பான்மையாக பல தமிழ்ப்பாடல்களுக்கு மெட்டமைத்தும்,இயற்றியும் தொகுத்தும் உள்ளார். தமிழிசை ஆய்வுகள் பல புரிந்துள்ளார்.  தமிழ் மொழி மேல் கொண்ட தீராத காதலால் வள்ளுவன் வாக்கை வர்ணத்தில் பதித்தார். 

               இசை வடிவங்களில் இன்றியமையாதது தான வர்ணம் ஆகும்.  அப்பியாச கானத்திலும், சபா கானத்திலும் வர்ணம் முக்கியமாக இடம் பெறும்.  ஆரம்ப இசைக் கல்வியில் மாணவர்கள் வர்ணத்தைக் கற்றுக்கொள்ளும் பொழுது அதன் இயல் எளிதாக மனதில் நிற்கும்.  இதனைக் கருத்தில் கொண்டு வா.சு. கோமதி சங்கர ஐயர் 46 திருக்குறள் வர்ணங்களை இயற்றியுள்ளார். 

               "தான வர்ணக்கடல்" என்ற தமது சொந்தப் படைப்பான நான்கு தொகுதிகளில் பல வர்ணங்களின் தொகுப்போடு திருக்குறள்                வர்ணங்களையும் இயற்றியுள்ளார்.  பொருளுக்கு ஏற்ற சுவையுடைய இசையுடன் திருக்குறள் இனிதே பொருந்திவருமாறு அமைக்கப்பட்டுள்ளது.  வர்ண்ங்கள் ஆதி தாளத்தில் இயற்றப்பட்டது.  வர்ணத்தின் அங்கங்களான பல்லவியில் ஒரு குறளும், அதே அதிகாரத்தில் இருந்து அனுபல்லவியில் ஒரு குறளுமாக பூர்வாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  சரணம் - வர்ணக்கோட்பாடுகளின் படி ஒரு ஆவர்த்தனமே அமைக்க முடியுமாதலால் பல்லவி அனுபல்லவியில் உள்ள குறள்கள் கூறும் கருத்திற்கு பொருத்தமான கருத்தைக் கொண்ட வரியை கோமதி சங்கர ஐயர் இயலாக அமைத்துள்ளார். 
               "தான வர்ணக்கடல்" என்ற நான்கு தொகுதிகளைக் கொண்ட நூலில் மொத்தம் 43 திருக்குறள் வர்ணங்கள் காணப்படுகின்றன.  இவ் வர்ணங்களுக்காக 86 திருக்குறளைத் தெரிவு செய்துள்ளார்.  பல்லவி அனுபல்லவியில் உள்ள குறள்கள் எதுகை, மோனை பொருந்திவருமாறும் கருத்துக்களில் பொருள் பொதிந்துவருமாறும் இசை அமைத்துள்ளார்.
உதாரணம் :

இராகம் : தோடி                                                   தாளம் : ஆதி

                              பல்லவி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர்  பூசல் தரும் ||   (குறள் : 71)

அனுபல்லவி

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு  || (குறள் : 72)

சரணம்

அன்பின் பெருமை அறிதல் நீர்மை.

நான்கு தொகுதிகளில் உள்ள திருக்குறள் வர்ணங்களின்
விபரங்கள் :

               தான வர்ணக்கடல் தொகுதி - 1 இல் தோடி இராகமும் அதன் ஜன்னிய இராகங்களையும் கொண்டு வர்ணங்கள் மெட்டமைக்கப் பட்டுள்ளன்.  இந் நூலில் 11 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 

தொகுதி -1

1.  அன்பிற்கும் உண்டோ - தோடி
2.  இருந்தோம்பி - தன்யாசி
3.  எழு பிறப்பும் - ஹிந்தோளம்
4.  அறவாழி - அசாவேரி
5.  நன்றி மறப்பது - சுத்த தன்யாசி
6.  செறிவறிந்து - புன்னாகவராளி
7.  வான் நின்று - ரேவகுப்தி
8.  அருளிலார்க்கு - ஜயந்தஸ்ரீ.
9.  சிறப்பு ஈனும் - சுத்த சீமந்தினி
10.  நடுவின்றி - நாகவராளி
11.  புறங்கூறி - கண்டா

தான வர்ணக்கடல் தொகுதி - 2 இல் 13 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 

தொகுதி -2

1.  பயனில் சொற்பாராட்டு - தேனுகா
2.  தன்னுயிரி நீப்பினும் - நாடகப்பிரியா
3.  ஐயத்தின் நீங்கித் - கோகிலப்பிரியா
4.  நெருதல் உளனொருவன் - வகுளாபரணம்
5.  மனைத்தக்க மாண்புடையார் - ஆகிரி
6.  அழுக்காறின் அல்லவை - வசந்த பைரவி
7.  படைக்குடி கூழ் - லலித பஞ்சமம்
8.  கெடுவல் யான் என்பது - மாயாமாளவ கௌளை
9.  அறிவுடையார் - மலஹரி
10.  துறந்தார்க்கும் - சாவேரி
11.  பாத்தூண்மரீ இ- லலிதம்
12.  அகனமர்ந்து - மனோலயம்
13.  வாய்மை எனப்படுவது - ஜகன் மோகனம்              

தான வர்ணக்கடல் தொகுதி - 3 இல் 11 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 

தொகுதி -3

1.  இருமை வகை தெரிந்து - நாட்டை
2.  நுண்ணிய நூல் பல கற்பினும் -கௌளை
3.  சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி - நாதநாமக்கிரியை
4.  அறன் கடை நின்றாருள் எல்லாம் - பூபாளம்
5.  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் - கௌளிபந்து
6.  ஒழுக்கம் உடைமை - கமல மனோஹரி
7.  செவிக்குணவு இல்லாத - மேகரஞ்சனி
8.  வனச என்பர் வையத்தார்க் கெல்லாம் - பரசு
9.  காலம் கருதி இருப்பர் - பாடி
10.  பொறுத்தல் இறப்பினை - சக்கரவாகம்
11.  கடனறிந்து காலம் கருதி - வாஹினி


தான வர்ணக்கடல் தொகுதி - 4 இல் 8 திருக்குறள் வர்ணங்கள் உள்ளன. 


முனைவர்.சிவகௌரி கிரீஷ்குமார்

(தமிழிசை ஆய்வாளர்,
தமிழிசைக் கலைஞர்)
சிதம்பரம்.

1 கருத்து: