பேராசிரியர் முனைவர் .மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு இணையம் மூலம் ஆற்றும் பெரும் பணியை உலகம் நன்கு அறியும். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனாரின் வாழ்வையும் இசைப்பணிகளையும் தொகுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆவணப்படமாக வெளியிட்டு இசைத்தமிழ் உலகிற்கு பெரும்தொண்டாற்றியவர். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பிறந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர்களின் இசைத்தொண்டினையும் தம் ஆராய்ச்சித்திறமையாலும் கடும் உழைப்பாலும் தொகுத்து ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். ஐம்பது நிமிடம் ஓடத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை உருவாக்க இவர்கள் பட்ட பாட்டினை ஓரளவு நான் அறிவேன்.
முனைவர் இளங்கோவன் அவர்கள் அடிகளாரின் ஆவணப்படம் தயாரிப்பதற்கு தகவல்கள் திரட்டும் பணியை தொடங்கியதிலிருந்து ஆவலுடன் அவதானித்து வந்தேன். சென்றமாதம் ஐயா அவர்களின் புதுச்சேரி இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். ஐயாவின் குடும்பத்தினர் எம்மை வரவேற்று அன்புடன் உபசரித்தனர். ஐயா அவர்கள் தாம் தயாரித்த சுவாமி விபுலானந்தரின் ஆவணப்படத்தினை திரையிட்டுக் காட்டினார்.
காட்சிகள் ஒவ்வொன்றும் என் மனத்திரையில் நீங்கா இடம் பிடித்து விட்டன.அடிகளாரை நேரில் கண்டதுபோன்ற உணர்வெழ உள்ளம் உருகி விழிகளில் நீர்த்திரையிட்டன. காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள அடிகளாரின் உருவச்சிலை அற்புதமாக உயிரோட்டத்துடன் மிளிர்கிறது.
ராஜ்குமாரின் பின்னணி இசை படத்திற்கு மேலும்மெருகூட்டியுள்ளது.
விபுலாநந்த அடிகளாரைப்பற்றி உலகம் அறியாத பல புதிய செய்திகளை ஆவணப்படத்தில் காண முடிந்தது . சுவாமிகள் பிறந்த இடத்திலிருந்து, அவர் கல்வி கற்ற,பணியாற்றிய ,யாழ் நூல் இயற்றிய, அரங்கேற்றிய இடம் வரை நேரில் சென்று ஒளிப்பதிவு செய்து தொகுத்துள்ளார்.அடிகளார் பணியாற்றிய பாடசாலைகள் கல்லூரிகள் ஆகியவற்றை ஒன்று விடாது இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பதிவுசெய்துள்ளார்.
அடிகளாரின் துறவு வாழ்வினை விளக்கும் வண்ணம் இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் உரை சிறப்பாக அமைந்துள்ளது.
விபுலானந்த அடிகளின் சமகாலத்து அறிஞர்கள், உறவினர்கள்,மாணவர்கள், அவரை ஆதரித்தவர்கள், என அவர்கள் இல்லங்களுக்கு தேடிச்சென்று அவர்களது அனுபவங்களையும். அவர்களுக்கு சுவாமிகள் எழுதிய அரிய கடிதங்களையும்ஆவணப்படத்தில் காட்டியுள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும்.
அடிகளாரின் மாணவரான க.வெள்ளைவாரணனாரின் புதல்வியைச் சிதம்பரத்தில் அவர் இல்லத்தில் சந்தித்து நேர்காணல் செய்துள்ளமை பாராட்டத்தகுந்த பணியாகும். விபுலாநந்த அடிகளார் வெள்ளைவாரணனா ருக்கு எழுதிய அரிய கடிதங்களை குடும்பத்தாரிடமிருந்து பெற்று வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளமைக்குத் தமிழுலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது
ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன். அவர்கள் படப்பிடிப்பிற்கும் ஆய்விற்குமாக இலங்கை செல்லும் பொழுது, என் பிறந்தகமான திருகோணமலையில் விபுலாநந்த அடிகள் அதிபராக பணியாற்றிய இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்குச் செல்வதாக கூறினார். திருகோணமலையில் அதே பாடசாலையில் பணியாற்றிய ஈழத்து காந்தி என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட காந்திமாஸ்டர் ஐயா இருக்கிறார் எனவும், அவர் நூறு வயதினை நெருங்கிக்கொண்டிருக்கிறார் எனவும், அ டிகளாரைப்பற்றி விவரம் ஏதேனும் தெரிந்திருக்கும் எனவும், கூறினேன். எனவே காந்தி மாஸ்டரை அவசியம் பார்த்து வாருங்கள் என்று கூறினேன்.
மு. இளங்கோவன் அவர்கள் காந்தி மாஸ்டரைச் சந்தித்து பல விபரங்களைப் பதிவு செய்துள்ளதை அறிந்து வியப்படைந்தேன். அவர், விபுலாநந்த அடிகள் திருகோணமலை இந்துக்கல்லூரியில்அதிபராகப் பணியாற்றிய போது காந்தி மாஸ்டர் அப்பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்ற செய்தியை மு.இளங்கோவன் என்னிடம் தெரிவித்த பொழுது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது காரணம் காந்திமாஸ்டரின் பக்கத்துவீட்டில் தான் நான் பிறந்து வளர்ந்தேன் . காந்தி மாஸ்டரை பல நாள்கண்டிருந்தும் பக்கத்தில் வாழ்ந்திருந்தும் . இவர் அடிகளாருடன் பணியாற்றிய அரிய செய்தி இளங்கோவன் அவர்களின் ஆய்வின் மூலமாகத்தான் எனக்கும் உலகத்திற்கும் தெரிய வந்தது.
இளங்கோவன் ஐயா காந்திமாஸ்டரை சந்தித்து அடிகளாருடனான அவரது அனுபவத்தை பதிவு செய்து வந்த சில மாதங்களில் காந்தி மாஸ்டர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அடிகளாரின் ஆவணப்படத்தில் காந்தி மாஸ்டரின் அனுபவப்பகிர்வு எம் திருகோணமலை மக்களுக்கு அரிய கருவூலமாகவிளங்கும்.
விபுலாநந்த அடிகள் பிறந்த ஊர்,படித்த பள்ளிகள் வளர்ந்த இடங்கள் யாவும் முறைப்பட ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளன தக்க அறிஞர்களின் கருத்துரைகள் படத்திற்கு மேலும் சிறப்பைக்கொடுக்கின்றன
வெள்ளை நிற மல்லிகையோ என்ற அடிகளாரின் பிரபலமான பாடலைச்
சாருகேசி இராகத்தில் தொடங்கி இராகமாலிகையாக இசையமைத்து திரு.ராஜ்குமார் அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார்.அதற்கான நடனக்காட்சிகளும் கோயில் பின்புலத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.இந்தப்பாடல் இலங்கைத்தமிழ் மக்கள் எதிர்காலத்தில் கொண்டாடத்தகுந்த பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
திறமையாளர்களின் படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் இலங்கை இந்துக் கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் திரு.உமாமகேஸ்வரன் ஐயா அவர்கள் ,மு.இளங்கோவன் அவர்கள் உருவாக்கிய சுவாமி விபுலாநந்தரின் ஆவணப்படத்தினை அமைச்சகம் மூலம் இலங்கையில் பலரும் பார்ப்பதற்கு வழி செய்துள்ளதை அறிந்து நன்றியுடன் அவரை வணங்கிப்பாராட்டுகின்றேன்.
இவ் ஆவணப்படத்தினை உருவாக்க மு. இளங்கோவன் ஐயா கடுமையாக உழைத்துள்ளார் தமது சொந்த செலவிலேயே படத்தை தயாரித்திருப்பது அடிகளார் மேல் அவர் கொண்டுள்ள பெருமதிப்பைக் காட்டுகிறது. ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளுக்கு அவர்தம் குடும்பத்தினரின் பங்களிப்பு அளப்பரியது. கனடாவில் வாழும் திரு.சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் இந்தப்படம் உருவாவதற்குப் பலவகையில் துணைநின்றுள்ளதை அறிந்து அவரையும்பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மு.இளங்கோவன் அவர்கள் விடுமுறை நாட்களில் கூட தம் குடும்பத்தினருடன் இருப்பது குறைவு. ஓராண்டு உழைப்பையும் அவர் ஊதியத்தையும் உள்வாங்கிக் கொண்ட விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உலகம் முழுதும் திரையிட்டுப்பார்க்கும் தரத்தில் உள்ளது. புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டுவதன் வழியாகத் தாயகச் சிறப்பினை நினைவூட்டலாம்.
சிறந்தமுறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படைப்பினை தமிழ் ஆர்வலர்களும் மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டும்.
16.09.2017 அன்று புதுச்சேரியில் திருமதி சௌமியா அன்புமனி அவர்களால் தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் இவ் ஆவணப்படம் வெளியிடப்படவும் திரையிடப்படவும் உள்ளது. (அழைப்பிதழ் விபரம் இணைக்கப்பட்டுள்ளது) வாய்ப்புக் கிடைக்கும் தமிழ் ஆர்வலர்கள் அவசியம் கண்டு மகிழுங்கள். மு.இளங்கோவனை வாழ்த்தி, மேலும் பணிகள் சிறக்க ஊக்கப்படுத்துங்கள்.
மு.இளங்கோவன் ஐயாவின் இம் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன். இன்னும் பல இசைத்தமிழ் அறிஞர்களின் இசைத்தொண்டுகளை ஆவணப்படமாக தயாரிக்க வேண்டும் என மு. இளங்கோவன் ஐயா அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
முனைவர்.சிவகௌரி கிரீஷ்குமார்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக